தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவல நிலைகள்.

லியோ

UPDATED: May 29, 2023, 7:30:55 PM

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி (Thanjavur Medical College) தஞ்சாவூர் மாவட்டத்தின் தலைநகரில் அமைந்துள்ளது.

இந்த மருத்துவமனை தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் தஞ்சை நகரில் 1950களிலேயே தொடங்கப்பட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக இயங்கி வருகிறது.

சென்னை டாக்டர் எம். ஐி. ஆர். மருத்துவப் பல்கலைகழகத்தின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கிற தமிழ்நாட்டில் உள்ள மிகப் பழமையான மருத்துவக் கல்லூரிகளில் ஒன்று.

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை 1960-ம் ஆண்டு 500 படுக்கைகள் கொண்டு தொடங்கப்பட்டது. படிப்படியாக வளர்ந்து டெல்டா மாவட்ட மக்களுக்கான பிரதான மருத்துவமனையாக உள்ளது.

தற்போது 1,172 படுக்கைகளுடன் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துமவனை செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் 150 கோடி மதிப்பீட்டில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தற்போது தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த மாவட்டம் வேளாண் தொழிற்சார்ந்து, உள்ள மக்களுக்கு வேளாண் தொழிலே பிரதானம் என்பதால் மருத்துவமனையில் சிறு விவசாயிகள், விவசாயகூலி தொழிலாளர்கள் அதிகமாக இந்த மருத்துவமனையை தேடி வருகிறார்கள்.

மருத்துவமனையில் பொது மருத்துவம், மூளை நரம்பியல், ரத்த நாள அறுவை சிகிச்சை, இதய அறுவை சிகிச்சை, சிறுநீரகத்துறை, புற்றுநோய் மையம், நுண்கதிர் துறை, புற்றுநோய் கதிர்வீச்சு துறை, மனநல மருத்துவம், முடநீக்கியல் துறை, பிளாஸ்டிக் சர்ஜரி, நுண்ணுயிரியல் துறை, மயக்கவியல் துறை, காது மூக்கு தொண்டை சிகிச்சைத்துறை,

மூட்டு தசை மற்றும் இணைப்பு திசு நோய்கள் துறை, நாள்பட்ட வலிகளுக்கான மருத்துவம், உயிர் காக்கும் அவசர சிகிச்சை, செயற்கை சுவாச சிகிச்சை, விஷ முறிவு சிகிச்சை, இதய நுரையீரல் துறை, அவசர சிகிச்சை, மனநோய் பாதித்தவர்களுக்கான சிகிச்சை, சிடி, எம்.ஆர்.ஐ ஸ்கேன் என ஏராளமான துறைகள் உள்ளன. 

மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் சூழலில் மருத்துவமனை கழிவறைகள் சுகாதாரமாக இல்லாமல் பயன்படுத்த இயலாத அருவருக்கத் தக்க அசுத்தம் நிறைந்ததாகவும், வார்டுக்குள்ளே எந்த நேரமும் நாய்கள் சுற்றித் திரிவது நோயாளிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.

சிகிச்சைக்காக நடக்க இயலாத நோயாளிகள் மருத்துவமனைக்குள் தனியார் வாகனங்களில் செல்லும் போது அங்கு செக்போஸ்ட் போட்டு தடுத்து வைத்திருக்கிறார்கள். இது பற்றி அங்குள்ள மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்கும்போது வன இலாக்காக்களில் தான் செக் போஸ்ட் போடுவார்கள்.

இங்கு வித்தியாசமாக மருத்துவமனைக்குள்ளே செக் போஸ்ட் செக்யூரிட்டிகள் போட்டு தடுக்கிறார்கள். சில மருத்துவர்கள் வாகனங்களை மட்டும் அனுமதிக்கும் செக்யூரிட்டிகள். மருத்துவமனையில் வேலை பார்க்கும் ஊழியர்களின் வாகனங்களையும்,

மருத்துவத்திற்காக வெளியூரில் இருந்து வரும் நோயாளிகளின் அட்டெண்டர் வாகனத்தையும் உள்ளே அனுமதிக்காமல் தடுப்பதும், அப்படி வெளியே நிறுத்தும் வாகனங்கள் பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் தொடர்ந்து திருட்டு போவதுமாக இருக்கிறது. 

இந்த நிலையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளேயே ஒரு காவல் நிலையமும் இயங்குகிறது அதை மீறியும் திருடர்கள் வாகனங்களை திருடி செல்வது வழக்கமாக நடைபெறுகிறது.

அவுட்சோர்சிங் முறையில் தனியாரிடம் நோயாளி தள்ளுவண்டி தள்ளும் நபர்களும் காவலாளிகளும் இருப்பதால் அவர்கள் மருத்துவ ஊழியர்களுக்கு கட்டுப்பட்டவர்களாகவும் இல்லை.

எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க வரும் நோயாளிகளை எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கும் கட்டடத்தின் வாசலிலேயே தள்ளுவண்டியை நிறுத்திவிட்டு அங்கிருந்து போர்வையிலேயே ஸ்கேன் இருக்கும் இடம் வரைக்கும் நோயாளியை நான்கு பேரை துணைக்கு கூட்டி எடுத்து செல்லும் மிக கொடுமையான நிலையில் உள்ளது எம்ஆர்ஐ ஸ்கேன்.  

சில நோயாளிகள் உறவினர்கள் இல்லாமல் வந்திருந்தால் அவர்களை தூக்கிச் செல்ல அங்கு இருக்கும் நபர்களிடம் நோயாளியின் அட்டண்டர் கெஞ்சும் சூழ்நிலையிலும், நீண்ட நேரம் வெயிலில் மணிக்கணக்காக நோயாளியை தள்ளு வண்டியிலேயே வைத்து காத்திருக்கும் நிலையே இந்த மருத்துவமனையில் உள்ளது. 

இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் வந்து செல்லும் இடத்தில் சுகாதாரக் குறைபாடுகளும்,

பாதுகாப்பு குறைபாடுகளும் தொடர்ந்து இருப்பதை என்றைக்கு தான் இந்த மருத்துவமனை டீன் மற்றும் மாவட்ட நிர்வாகம் தீர்த்து வைப்பார்கள் என்று அங்கு வேலை பார்க்கும் ஊழியர்களும் வந்து செல்லும் நோயாளிகளின் உறவினர்களும் கேள்வி எழுப்புகிறார்கள். இந்தக் குறைகளை மாவட்ட நிர்வாக கலெக்டர் தீர்த்து வைப்பாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.

VIDEOS

RELATED NEWS

Recommended