• முகப்பு
  • district
  • சமூக விரோத செயல்களை கண்காணிக்கவும், கஞ்சா விற்பனை மற்றும் செயின் பறிப்பு சம்பவங்களை தடுக்கவும் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் !

சமூக விரோத செயல்களை கண்காணிக்கவும், கஞ்சா விற்பனை மற்றும் செயின் பறிப்பு சம்பவங்களை தடுக்கவும் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் !

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தமிழகத்தில் அதிக தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் என காஞ்சிபுரம் மாவட்டம் பெயர் பெற்றுள்ளது. பல மாநிலங்களில் இருந்தும் ,வெளிநாடுகளில் இருந்தும் பட்டு சேலைகள் வாங்கவும் ,பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவில் , கைலாசநாதர் கோவில்,ஏகாம்பரநாதர் கோவில் , தேவராஜ பெருமாள் கோவில் மற்றும் மாமல்லபுரம் கடற்கரை இவைகளை கண்டுகளிக்கவும், உலக அளவில் பெயர் பெற்ற பட்டு சேலைகளை வாங்கவும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் காஞ்சிபுரத்துக்கு வருகின்றனர். மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக அளவில் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றது. அதில் பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பன்னாட்டு மற்றும் உள்ளூர் தொழிற்சாலைகள் இயங்கி வருவதாலும், லட்சக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளிமாநில இளைஞர்கள் , கல்லூரி மாணவ மாணவிகள் காஞ்சிபுரம் பகுதியை சுற்றிலும் வசித்து வருகிறார்கள். இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களின் நடமாட்டம் அதிகரித்து கொண்டே வருகின்றது. இங்குள்ள மாணவர்கள் மத்தியில் கஞ்சா புகைக்கும் பழக்கம் அதிகம் இருப்பதாக ஒரு ஆய்வறிக்கை கூறுகின்றது. சமீப காலமாகவே காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் , திருடர்களின் புகலிடமாகவும், மதுப் பிரியர்களின் மதுகூடமாகவும், சூதாட்டக்காரர்களின் சொர்க்கபுரியாகயும் , கஞ்சா விற்பனையின் முக்கிய ஹப்பாகவும் காஞ்சிபுரம் மாறி வருகிறது என்பது வேதனைக்குரியது என சமூக ஆர்வலர்கள் புலம்புகின்றனர். அதிலும் கஞ்சா போதையால் அடிக்கடி அடிதடி , வெட்டுகுத்து, காட்டன் சூதாட்டம் போன்ற அனைத்து சமூக விரோத செயல்களும் பல்லவர் மேடு, பொய்யா குளம், தேனம்பாக்கம், ஓரிக்கை, தாயார்குளம், பஞ்சுப் பேட்டை பெரியதெரு, பருத்திக்குளம், கோனேரிக்குப்பம் போன்ற பகுதிகளை சுற்றி நடைபெற்று வருகிறது. அதில் பல்லவர் மேடு பகுதிகளில் மட்டும் ஐந்துக்கும் மேற்பட்ட கொலைகள்,15க்கும் மேற்பட்ட வெட்டுக் குத்துகள், 25க்கும் மேற்பட்ட கஞ்சா வழக்குகள், 50க்கும் மேற்பட்ட மதுபான வழக்குகள் போன்றவை இந்தப் பகுதியில் நடைபெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது. "இது தொடர்பாக நாம் ஏற்கனவே விலாவரியாக பலமுறை செய்தி வெளியிட்டிருந்தோம்." குற்றங்கள் அதிகரித்துவருவதின் எதிரொலியாக பல்லவர்மேடு பகுதியில் புறக்காவல் நிலையம் திறந்திட காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் உத்தரவிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லவர் மேடு பகுதியில் சுமார் 3 லட்சம் மதிப்பீட்டில் புறக்காவல் நிலையம் கட்டப்பட்டது. அங்கு குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு 16 இடங்களில் 21 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 51 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அங்கு 3 ஷிப்டுகளில் 24 மணிநேரமும் காவலர்கள் பணியில் உள்ளவாறு திட்டமிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் உட்கோட்ட காவல் துணை காவல் கண்காணிப்பாளர் பூ.பொ.ஜீலியஸ் சீசர் அவர்களின் மேற்பார்வையில் சிவகாஞ்சி காவல்நிலைய காவல் ஆய்வாளர் ஜெ.விநாயகம் அவர்கள் முயற்சியின் பேரில் அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தினை வடக்கு மண்டல காவல்துறைத் தலைவர் பிரேம் ஆனந்த் சின்கா அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் சத்திய பிரியா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர், ஏடிஎஸ்பி வினோத் சாந்தாராம் ஆகியோர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். இங்கு அமைக்கப்பட்டுள்ள அதி நவீன கேமராக்களின் செயல்பாட்டினை தங்கள் தொலைபேசியின் வாயிலாகவே காவல்துறை அதிகாரிகள் எந்த இடத்தில் இருந்தும் கண்காணிக்க இயலும். இதனால் மேற்படி பகுதிகளில் குற்றங்கள் நடவாமல் தடுப்பதற்கும் குற்றம் நிகழுமபட்சத்தில் உடனடியாக குற்றவாளிகளை பிடிக்கவும் ஏதுவாக இருக்கும் என்பது குறிப்படத்தக்கது. இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் தனிப்பிரிவு ஆய்வாளர் பிரபாகர், உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி , மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் வெங்கடேசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். காஞ்சிபுரம் செய்தியாளர் லட்சுமிகாந்த்.

VIDEOS

RELATED NEWS

Recommended