Author: THE GREAT INDIA NEWS

Category: chennai

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவுக்கு கீழ் கட்டப்படும் கட்டடங்களுக்கு, மாநகராட்சி அனுமதி அளிக்கிறது. அதற்கு மேலான பரப்பளவில் கட்டப் படும் கட்டடங்களுக்கு, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., அனுமதி அளிக்கிறது. கட்டடத்திற்கான வடிவமமைப்பு, வரைப்படம், திட்டம் உள்ளிட்டவை அடிப் படையில், கட்டட அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டியும், விதிகளை மீறி பெரும்பாலான கட்டடங்கள் கட்டப் படுகின்றன.இந்த விவகாரத்தில், குறிப்பிட்ட சில மாநகராட்சி அதிகாரிகளுக்கு, கட்டட உரிமையாளர்கள், பொறியாளர்கள் தரப்பில் கவனிப்பு செய்யப்படுவதால், அவர்கள் விதிமீறல்களை கண்டுகொள்ளாமல் விடுவதாகவும் கூறப் படுகிறது. இந்நிலையில், பல ஆண்டுகளுக்குப் பின் சென்னை மாநகராட்சியில், உள்ளாட்சி பிரதி நிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால், புதிதாக தேர்வாகியுள்ள கவுன்சிலர்கள் சிலர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக செலவிட்ட பணத்தை திரும்ப எடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர். அதற்காக, புதிதாக கட்டடம் கட்டும் உரிமையாளர்களிடம் வசூல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளதாக புகார் எழுந்து உள்ளது.மாநகராட்சியின் பல மண்டலங்களிலும், கட்டடங்களுக்கான திட்ட அனுமதி வழங்குவதிலும், விதி மீறல்களை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருக்க செய்யவும், சதுர அடி கணக்கில் கட்டணம் நிர்ணயித்து, கவுன்சிலர்கள் பணம் பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர். இது தவிர, கட்டப்பஞ்சாயத்து, அடி தடி, அதிகாரிகளை மிரட்டுதல் உள்ளிட்ட சம்பவங்களும் ஆங்காங்கே நடந்து வருகின்றன. சமீபத்தில், வட சென்னை பகுதியில், பெண் கவுன்சிலரின் கணவர் மற்றும் அவரது ஆதரவாளர்கள், ரோந்து போலீசாரிடம் செய்த ரகளை, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே போல், கடந்த மாதம், வட ஜசென்னை பெண் கவுன்சிலரின் கணவர் கட்டுமான பணிக்கு லஞ்சம் கேட்பதாக எழுந்த புகார் எழுந்தது. இதுபோல் பல்வேறு பகுதிகளிலும், கவுன்சிலர்கள் லஞ்சம் பெறுவது அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு நிர்வாகம் மற்றும் ஆளுங்கட்சி மீது, பொதுமக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படுவதை தடுக்க, அடாவடி கவுன்சிலர்கள் மீது நடவடிக்கை எடுக்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில், அடாவடியில் ஈடுபடுதல், பொது மக்களை மிரட்டி பணம் வசூல் செய்தல், விதிமீறல்களுக்கு ஒத்துழைத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும் கவுன்சிலர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.தொடர் புகார்கள் எழும் கவுன்சிலர்கள் மீது பதவி பறிப்பு நடவடிக்கை பாயும் எனவும், எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே போல் விதிகளை மீறி கட்டப் பட்டுள்ள கட்டடங்களில் கதவு, ஜன்னல்களை அகற்றும்படி, சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றமும் சமீபத்தில் உத்தரவிட்டது.இதை தொடர்ந்து, விதி மீறி கட்டப் பட்டுள்ள கட்டடங்களை கணக்கெடுக்கும் பணியை மாநகராட்சி தீவிரப்படுத்தி உள்ளது. கட்டட அனுமதிக்கு மாறான கட்டடங்கள், திட்ட அனுமதி பெறாத கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க, வார்டு உதவி அல்லது இளநிலை பொறியாளர், பகுதி உதவி செயற்பொறியாளர், மண்டல செயற் பொறியாளர்களுக்கு, மாநகராட்சி அதிகாரம் வழங்கியுள்ளது. பணம் கேட்போர் குறித்து புகார் அளிக்கலாம்!இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது சென்னையில், கட்டுமான பணிகள் நடை பெறும் இடங்களுக்கு அவ்வப் போது சென்று ஆய்வு நடத்த பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அப்போது கட்டட அனுமதி இல்லாத கட்டடங்கள், திட்ட அனுமதிக்கு மாறாக கட்டுமானம் நடை பெறும் கட்டடங்களை, கட்டுமான நிலையிலேயே நிறுத்த நோட்டீஸ் வழங்கப்படும். மேலும், திட்ட அனுமதி இல்லாத கட்டடங்கள் மற்றும் திட்ட அனுமதிக்கு மாறாக கட்டப்பட்டு பயன் பாட்டில் உள்ள கட்டடங்களை பயன்படுத்த முடியாத அளவிற்கு, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, நுழைவு வாயிற் கதவுகள், ஜன்னல்களை அகற்றப்படும். தற்போது, சி.எம்.டி.ஏ., வுடன் இணைந்து, இந்தாண்டு ஜன., 1 ஆம் தேதி முதல் கட்டப்பட்டு செயல் பாட்டுக்கு வந்த கட்டடங்கள், கட்டப்படும் கட்டடங்களை ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இதுவரை, 500 க்கும் மேற்பட்ட கட்டடங்கள் விதி மீறி கட்டப்பட்டுள்ளன. இவற்றில், 70க்கும் மேற்பட்ட கட்டடங்களுக்கு, லாக் ஆப் நோட்டீஸ் என்ற கட்டடத்தை பூட்டி சீல் வைப்பதற்கான நோட்டீஸ் வழங்கப் பட்டுள்ளது. இதை தொடர்ந்து, 2021ம் ஆண்டு முதல் கட்டப் பட்டுள்ள கட்டடங்களை ஆய்வு செய்யும் பணிகள் நடை பெறும். மேலும், கட்டட அனுமதி மற்றும் விதி மீறிய கட்டடங்கள் விவகாரங்களில், கவுன்சிலர்கள் தலையீடு இருக்கக் கூடாது என, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அனைத்து கவுன்சிலர்களுக்கும் எச்சரிக்கை விடப் பட்டுள்ளது. இதையும் மீறி, கட்டட அனுமதியில் தலையிடுதல், விதி மீறிய கட்டடங்களுக்கு ஆதரவாக செயல்படும் கவுன்சிலர்கள் மீது, பதவி பறிப்பு நடவடிக்கை பாயும். இவ்வாறு அவர்கள் கூறினர். செய்தியாளர் பா. கணேசன்

Tags:

#இன்றையசெய்திகள்சென்னை #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #chennainewstodaytamil #chennaiflashnewstamil #cmdaapproved #mmdaapproved #Sealingforirregularbuildings #buildingapproval #vithimeeralkatadangalseal
Comments & Conversations - 0