திருவள்ளூரில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 71 பார்-க்கு சீல்

சுரேஷ்பாபு

UPDATED: May 23, 2023, 8:42:50 PM

தஞ்சாவூரில், டாஸ்மாக் ‘பாரில்’ மது அருந்தி, இருவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், திருவள்ளூர் நகரில், அனுமதி இல்லாமல் நடத்திய 4 பார்களுக்கு போலீசார் சீல் வைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், திருத்தணி, பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, ஆர்.கே.பேட்டை ஆகிய 7 தாலுகாக்களில், 137 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன.

இந்த கடைகளுக்கு, காக்களூர் தொழிற்பேட்டையில் உள்ள, திருவள்ளூர் மேற்கு மாவட்ட டாஸ்மாக் குடோனில் இருந்து, பீர் வகைகள், மது பானங்கள் தினமும் லாரிகள் மூலம் விநியோகிக்கப்படுகின்றன.

மேற்கண்ட 137 டாஸ்மாக் கடைகளில், 20 கடைகளுக்கு அருகில் மட்டும், ‘பார்’ நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், கடந்த, ஆக.19-ம் தேதி, மீதம் உள்ள கடைகளுக்கு அருகில், ‘பார்’ அமைக்க ஏலம் நடந்தது. இதில், 36 கடைகளுக்கு, ‘பார்’ நடத்த அனுமதி வழங்கப்பட்டது. மீதம் உள்ள கடைகளுக்கு அருகில் அனுமதியில்லாமல் ‘பார்‘கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதற்கு கரூர் டீம் செயல்பட்டு மாவட்ட டாஸ்மாக் நிர்வாகத்தை கட்டுப்பாட்டில் வைத்து அனுமதியின்றி டாஸ்மாக் பார்களை நடத்தி வருகிறது. இதில் திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்திற்கு உட்பட்ட டோல்கேட் அருகில் 2 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன.

இந்த கடைகளுக்கு அருகில் தனியார் இடத்தில் பிரம்மாண்டமாக கடந்த, 6 மாத காலமாக பார் இயங்கி வருகிறது. இதே போல், மாவட்டம் முழுவதும், 50-க்கும் மேற்பட்ட இடத்தில் அனுமதியின்றி ‘பார்‘கள் இயங்கி வருகின்றன.

இங்கு, இரவு 10 மணி முதல் மறுநாள் மதியம் 12 மணி வரை மதுபானம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு பாட்டிலுக்கும் சுமார் 50 ரூபாய் முதல்70 ரூபாய் வரை கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த சில வாரத்திற்கு முன் கள்ளச்சாராயம் குடித்து விழுப்புரம் மாவட்டத்தில் 14 பேரும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 4 பேரும் பலியாகினர். 

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தஞ்சாவூர் மாவட்டம் வெள்ளைப் பிள்ளையார் கோவில் பகுதியில் இயங்கிய டாஸ்மாக் கடை அருகில் இயங்கி வந்த பாரில் மது அருந்தி சில மணி நேரத்தில் 2 பேர் இறந்தனர்.

போலீஸ் விசாரணையில், மது பானத்தில் சயனைடு விஷம் கலந்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., சிபாஸ் கல்யாண் உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும் போலீசார் டாஸ்மாக் கடை அருகில் இயங்கி வந்த பார்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் திருவள்ளூர் டோல்கேட் அருகில் திருப்பாச்சூர் ஊராட்சியில் இயங்கி வரும் டாஸ்மாக் பாரில் திருவள்ளூர் தாலுகா இன்ஸ்பெக்டர் கமலஹாசன் தலைமையிலான தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர்.

இதில் அந்த பார் அனுமதியின்றி இயங்கி வந்தது தெரிந்தது. இதையடுத்து திருப்பாச்சூர் வி.ஏ.ஓ., லோகநாதன் முன்னிலையில், போலீசார் மற்றும் கலால் துறையினர் அனுமதியின்றி இயங்கிய பாருக்கு சீல் வைத்தனர்.

மேலும், திருவள்ளூர் நகரில் அனுமதியின்றி இயங்கி வந்த தலக்காஞ்சேரி, பெரியகுப்பம் மற்றும் திருவள்ளூர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இயங்கி வந்த 3 பார்களுக்கும் போலீசார் சீல் வைத்தனர்.

இதே போல் திருத்தணி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, பள்ளிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் அனுமதியின்றி இயங்கி வந்த 71 பார்களுக்கும் போலீசார் சீல் வைத்தனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended