• முகப்பு
  • district
  • ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் இறந்தவர்களின் சடலங்களை பெற உறவினர்கள் அலைகழிப்பு.

ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் இறந்தவர்களின் சடலங்களை பெற உறவினர்கள் அலைகழிப்பு.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்தப் பகுதியில் அவ்வப்போது வாகன விபத்துக்கள் ஏற்படுவது வழக்கம். மேலும் ஸ்ரீபெரும்புதூர் சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இதனால் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பேரறிஞர் அண்ணா அரசு மருத்துமனை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த மருத்துவமனைக்கு நாளொன்றுக்கு புற நோயாளிகள் சுமார் 700 பேரும் உள் நோயாளிகள் 20 பேரும் சிகிச்சை பெற்று செல்கின்றனர். நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் சிக்கி உயிரிழப்பவர்களின் சடலத்தை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து பிணவறையில் உள்ள குளிரூட்டும் பெட்டிகளில் வைத்து பின்னர் பிரேத பரிசோதனை செய்து சடலங்கள் உறவினர்களிடம் அளிக்கப்படும். இந்நிலையில் அண்ணா அரசு மருத்துவமனையில் கடந்த 30 நாட்களாக பிரேத பரிசோதனை கூடத்தில் உள்ள குளிரூட்டும் பெட்டி (பிரீசர்) வேலை செய்யாததால் இறந்தவர்களின் சடலங்களை செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் காஞ்சிபுரத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கும் அனுப்பும் அவலம் ஏற்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 1ஆம் தேதி முதல் இன்றைய தேதி வரை சுமார் 12 நபர்கள் விபத்து மற்றும் பல்வேறு சூழ்நிலைகளில் இறந்துள்ளனர். பிணவறையில் உள்ள குளிரூட்டும் பெட்டி (பிரீசர்) வேலை செய்யாததை அறியாத மருத்துவமனை ஊழியர்கள் சடலங்கள் அதில் வைத்ததால் அந்த சடலங்கள் அழகி துர்நாற்றம் வீசி சுகாதார கேட்டை உண்டாக்கியது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு , அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவருக்கு தெரியாமல் இறந்து போன இருவரின் உடல்களை தனியார் ஆம்புலன்ஸ் நடத்தும் விமல் என்பவரின் பிரீசர் பெட்டியை வாடகைக்கு எடுத்து சடலத்தை அடைத்து பிணவறையில் வைத்துள்ளனர். இதற்காக இறந்தவர்களின் உறவினர்களிடம் நாளொன்றுக்கு 3000 முதல் 5000 ரூபாய் வரை பேரம் பேசி சுமார் 20 ஆயிரம் ரூபாய் வரை பணம் பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கு ஸ்ரீபெரும்புத்தூர் காவல்துறையினர் துணை போனதாகவும் தெரியவருகிறது. தனியார் ஆம்புலன்ஸ் நடத்தும் நபரொருவர் பணத்தை பெற்றுக்கொண்டு தன்னுடைய குளிர்சாதனப் பெட்டியை அரசு மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த விஷயம் அப்பகுதியில் மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தியது. சட்டப்படி இது குற்றம் என்பதை அறிந்த அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கைலாஷ் மருத்துவமனை ஊழியர்களை எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த பிரச்சனை பெரியதாக எழுந்த நிலையில் இறந்தவர்களின் சடலங்களை ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துமனையில் வைக்காமல் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கும் அனுப்புவதால் இறந்தவர்களின் சடலங்களை பெற உறவினர்கள் மிகுந்த அலைச்சலுக்கு உள்ளாகின்றனர். மேலும் இந்த மருத்துவமனை கட்டடம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அவ்வப்போது லட்சக்கணக்கில் செலவு செய்து புனரமைக்கப் பட்டு வருகின்றது. அதேபோல் பிணவறையில் வைக்கப்பட்டுள்ள குளிரூட்டும் பெட்டிகளும் கடந்த 10 ஆண்டுகளுக்குள்தான் வாங்கப்பட்டது. சரியான பராமரிப்பு இல்லாததால்தான் இந்த குளிரூட்டும் பெட்டிகள் அவ்வப்போது பழுதடைகின்றது. மேலும் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறை கட்டிடமும் , சமயலரையும் மிகவும் சேதமடைந்துள்ளதால் காற்று அல்லது பலமான மழை பெய்யும்போது கட்டிடம் இடிந்து விழும் நிலைக்கு தள்ளப்படும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். அரசு மருத்துவமனையின் நிர்வாக கோளாறு காரணமாகதான் இதுபோன்ற பிரச்சினைகள் சில மாதங்களாக ஏற்படுகின்றது என சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் கூறுகின்றனர். எனவே கால தாமதம் செய்யாமல் புதியதாக பிணவறை கட்டிடம் கட்டவேண்டும் என்றும் தரமான குளிரூட்டும் பெட்டிகள் (பிரிசர்) வாங்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். பேட்டி. கண்ணன் சமூக ஆர்வலர் காஞ்சிபுரம் செய்தியாளர் லட்சுமிகாந்த்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended