• முகப்பு
  • district
  • வனத்துறை கட்டுப்பாட்டில் கம்பம்மெட்டு சாலை, நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்க பொதுமக்கள் கோரிக்கை!!

வனத்துறை கட்டுப்பாட்டில் கம்பம்மெட்டு சாலை, நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்க பொதுமக்கள் கோரிக்கை!!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தமிழக கேரளப் பகுதியை இணைக்கும் மிக முக்கிய சாலையான வனத்துறையிடம் உள்ள கம்பம்மெட்டு சாலையை நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைத்து சாலையை அகலப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கம்பம்மெட்டு சாலை தேனி மாவட்டத்திலிருந்து கேரளாவை இணைக்க போடிமெட்டு, குமுளி, கம்பம்மெட்டு ஆகிய சாலைகள் உள்ளன. தமிழக மற்றும் கேரள பகுதியை இணைக்கும் மிக முக்கிய சாலையாக இந்த கம்பம்மெட்டு சாலை உள்ளது. இந்த நிலையில் வனத்துறையிடம் உள்ள கம்பம்மெட்டு சாலையை நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்க கோரிக்கை எழுந்துள்ளது. கம்பம் நகரில் இருந்து குமுளி வழியாக 20கி.மீ தூரமும், கம்பம்மெட்டு வழியாக 13 கி.மீ தூரமும் சென்றால் கேரளாவை அடையலாம். குறைந்த தூரம் என்பதால் பலரும் கம்பம்மெட்டு சாலை வழியாக கேரளா செல்கின்றனர். சபரிமலை சீசன் போது பல்வேறு மாநிலங்களில் இருந்தும் கேரள மாநிலத்திற்கு தமிழக பகுதி வழியாக செல்லும் பக்தர்கள் இந்த கம்பம்மெட்டு சாலையிலேயே சபரிமலைக்கு பயணிக்கின்றனர். தமிழகம் மற்றும் கேரளாவை இணைக்கும் குறைந்த தூரம் கொண்ட சாலை என்பதால் அத்தியாவசிய தேவை மற்றும் சரக்கு வாகனங்களும் இந்த சாலையை தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். தோட்டத் தொழிலாளர்கள் தேனி மாவட்டம் போடி பகுதி மற்றும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் 1.20 லட்சம் ஏக்கர் பரப்பளவில் ஏலக்காய் விவசாயம் நடைபெற்று வருகிறது. கேரளாவின் இடுக்கி, வண்டிபெரியார் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், தமிழகத்தில் மேகமலை, வெண்ணியாறு, மணலாறு, ஹைவேவிஸ், போடிமெட்டு, சுருளியாறு, கம்பம்மெட்டு ஆகிய பகுதிகளில் ஏலக்காய் விவசாயம் நடைபெற்று வருகிறது. தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம், கூடலூர், உத்தமபாளையம், சின்னமனூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள குமுளி, ஜக்கு பள்ளம், வண்டன்மேடு, நெடுங்கண்டம், அடிமாலி, கட்டப்பனை, செல்லார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏலக்காய் மற்றும் காபி தோட்டங்களில் வேலைக்கு ஜீப்புகளில் சென்று வருவது வழக்கம். கேரளாவுக்கு தோட்ட வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் அதிகம் கம்பம்மெட்டு சாலையை பயன்படுத்தி வருகின்றனர். வனத்துறை ஒப்படைக்க கோரிக்கை குறுகலான கம்பம் டு கம்பம் மெட்டு சாலை 13 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. இதில் ஏழு கிலோ மீட்டர் மலைப்பாதை ஆகும். இந்த சாலையில் ஒவ்வொரு முறையும் பராமரிப்பு பணி மேற்கொள்ளும் போது, நெடுஞ்சாலைத்துறை, வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டும். இந்த சாலையை அகலப்படுத்தி பராமரிப்பு பணிகள் செய்ய வனத்துறை அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.கம்பம்மெட்டு சாலை நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும், ஆவணங்களின் படி, கம்பம்மெட்டு சாலை வனத்துறையால் ஒப்படைக்கப்படாமல் உள்ளது. நாள் தோறும் கம்பம் டு கம்பம் மெட்டு சாலையில் வாகன போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில், இருமாநிலத்தை இணைக்கும் முக்கிய சாலை என்பதாலும் அதன் முக்கியத்துவம் கருதி, வனத்துறை முறைப்படி நெடுஞ்சாலைத்துறையிடம் கம்பம்மெட்டு சாலையை ஒப்படைக்ககோரி நெடுஞ்சாலைத்துறையினர் கடிதம் எழுதி உள்ளதும் குறிப்பிடத்தக்கது. நெடுஞ்சாலைத்துறை வசம் கம்பம்மெட்டு சாலை முழுவதுமாக ஒப்படைக்கப்பட்டால் சாலையை பராமரிப்பு செய்து அகலப்படுத்தி வாகன போக்குவரத்திற்கு எளிதாக அமையும் என வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். தேனி மாவட்ட செய்தியாளர் MP, ஜீவா.

VIDEOS

RELATED NEWS

Recommended