• முகப்பு
  • district
  • ரேஷன் கடைகளிலும் வண்டு மொய்த்த அரிசி விநியோகம் செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு ?

ரேஷன் கடைகளிலும் வண்டு மொய்த்த அரிசி விநியோகம் செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு ?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

காஞ்சிபுரம் நகரிலும் சுற்றுவட்டார பகுதிகளிலும் சுமார் 275 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன . பல ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வண்டுகள் மொய்த்ததால் பொதுமக்கள் நியாய விலைக் கடைகளில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் நகரில் பஞ்சுப் பேட்டை பகுதி AB O23 என்ற நியாய விலை கடையில் பொது மக்களுக்கு வழங்கப்பட்ட பச்சரிசி ,புழுங்கல் அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்களில் வண்டுகள் மொய்த்தும் , பழுப்பு ஏறிய நிலையில் பொருட்கள் வழங்கப்பட்டது . இதனை கண்ட மக்கள் நமது செய்தியாளருக்கு தகவல் அளித்ததன் பேரில் நமது செய்தியாளர் நேரில் சென்று கள ஆய்வு செய்ததில் , சில கடைகளில் பொது மக்களுக்கு வழங்கப்பட்ட அரிசி, கோதுமை ஆகிய பொருட்களில் வண்டுகள் மொய்த்தது கண்டறியப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வாலாஜாபாத் வட்டம் முத்தியால் பேட்டை பகுதியில் ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி விநியோகம் செய்ததால் , பத்துக்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு பிறகு மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக உணவுத்துறை அமைச்சர் காஞ்சிபுரம் பகுதியில் நியாயவிலை கடைகளில் ஆய்வு செய்து இனிமேல் தரமான அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என செய்தியாளர்களிடம் கூறியிருந்த நிலையில் , நேற்று நியாயவிலைக்கடைக்கு கொள்முதல் செய்யப்பட்ட அரிசி மூட்டைகள் தரமற்ற நிலையிலும், வண்டுகள் மொய்த்தும் காணப்பட்டது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நுகர்பொருள் வாணிப கழகம் கிடங்கிலிருந்து தரமான அரிசியை விநியோகம் செய்யாவிடில் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் செய்யப்படும் என பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். பெரும்பாலும் ஏழை எளிய மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக நியாய விலைக் கடைகளில் அளிக்கப்படும் அரிசி உள்ளிட்ட பொருட்களை வாங்கி உணவு உண்டு வருகின்றனர். இந்நிலையில் தரமற்ற பொருட்கள் வழங்குவதால் இது போன்ற அத்தியாவசிய பொருட்களை பயன்படுத்த முடியாமல் கால்நடைகளுக்கும், கோழிகளுக்கும் தீவனமாக கொட்டுகிறேம் என வேதனையுடன் பொதுமக்கள் தெரிவித்தனர். காஞ்சிபுரம் நகரில் பிள்ளையார்பாளையம், கிருஷ்ணன் தெரு, வெள்ளைக்குளம் தெரு, விநாயகபுரம் ,கைலாசநாதர் கோவில் மேட்டு தெரு, உள்ளிட்ட பல நியாய விலைக் கடைகளில் பழுப்பு நிறம் ஏறிய மஞ்சள் நிற அரிசி மூட்டைகள் ஒவ்வொரு கடைகளிலும் சுமார் 50க்கும் மேற்பட்ட மூட்டைகள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. காஞ்சிபுரம் செய்தியாளர் லட்சுமிகாந்த்.

VIDEOS

RELATED NEWS

Recommended