• முகப்பு
  • குற்றம்
  • சாராய வியாபாரிகளுடன் கைகோர்த்து கொண்டு பணியாற்றிய காவல் உதவி ஆய்வாளர் அதிரடி இடமாற்றம்!

சாராய வியாபாரிகளுடன் கைகோர்த்து கொண்டு பணியாற்றிய காவல் உதவி ஆய்வாளர் அதிரடி இடமாற்றம்!

வாசுதேவன்

UPDATED: May 28, 2023, 10:36:16 AM

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டில் சாராய வியாபாரிகளுடன் பணியாற்றிய காவல் உதவி ஆய்வாளர் அதிரடியாக வேலூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றியவர் தேவ பிரசாத் . இவர் வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது அரக்கோணம், வேலூர் பாகாயம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணியாற்றியவர்.

இந்நிலையில் பேரணாம்பட்டு காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இவர் செல்லும் இடமெல்லாம் சாராய வியாபாரிகள், திருடர்கள் உள்ளிட்டோருடன் இணக்கமாக இருந்து கொண்டு அவர்களுடன் கைகோர்த்துக் கொண்டு பணியாற்றி வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை வாரி குவித்துள்ளார் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர் செல்லும் இடமெல்லாம் பொதுமக்களை மிரட்டி அச்சுறுத்தி பணத்தை வாரி குவித்துள்ளார்.

அதேபோன்று அசையும் சொத்துக்கள் அசையா சொத்துக்கள் என்று ஆங்காங்கே வாரி குவித்துள்ளதும் பொதுமக்கள் தரப்பில் கதை கதையாய் கூறப்படுகிறது.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு மாவட்ட எல்லை பகுதியாக உள்ளது. இங்கே சுமார் 450 சில்லறை கடைகளும், 223 ஹோல்சேல் கடைகளும் செயல்பட்டு வருகின்றன. அது என்ன கடைகள் என்றால் கள்ளச்சாராய கடைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த தமிழக முதல்வர், பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர் என்றெல்லாம் அழைக்கப்பட்ட எம்ஜிஆர் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற போது வானொலியில் உரையாற்றினார் அப்போது அவர் பேசுகையில், சாத்கர் மலைப் பகுதியில் சாராயம் காய்ச்சப்பட்டு பேர்ணாம்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்ற தகவல் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அவர்களை எனது தலைமையிலான அதிமுக அரசு இரும்புக் கரம் கொண்டு அவர்களை அடக்கும் என்று குறிப்பிட்டார். இது வரலாறு.

இப்படிப்பட்ட பகுதியாக பேரணாம்பட்டு அன்றிலிருந்தே திகழ்கிறது. பேர்ணாம்பட்டில் வீட்டுக்கு வீடு சாராயம் காய்ச்சுவதும், விற்பனை செய்வதையும் ஒரு குடிசை தொழிலாகவே வைத்துக் கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்கு ஆண்களை விட பெண்கள்தான் சாராயம் விற்பனை செய்யும் பணியை செய்து வருகின்றனர். அவர்களை யாராவது கைது செய்தாலோ, அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் கொண்டு போய் நிறுத்தினாலோ நீதிபதியிடம் காவல் துறையினர் என்னை மானபங்கப்படுத்தினர் என்று கூறிவிட்டு வழக்கை தள்ளுபடி செய்துவிட்டு வெளியில் வருவதும் தொடர்ந்து நடந்து வருவது அனைவரும் நன்கு அறிந்த உண்மை.

நிலைமை இப்படி இருக்க சந்தர்ப்பத்தை சாதகமாக தனக்கு மாற்றிக் கொண்டு உதவி ஆய்வாளர் தேவபிரசாத் காவல் நிலையத்தில் பணிபுரிந்த ஆய்வாளர் முத்துக்குமாரையே மிஞ்சி தான் ஒரு பெரிய உயர் அதிகாரி என்பது போல மாயையை ஏற்படுத்தி சாராய வியாபாரிகளிடம் மாமூலை வாரி குவித்துள்ளார்.

மாதம் ஒன்றுக்கு ரூபாய் 60 லட்சத்துக்கும் அதிகமாக இவர் குவித்துள்ளார்.  கோடி கணக்கில் பணத்தை இங்கே வாரி சுருட்டி உள்ளது சாராய வியாபாரிகள் இடையே கதை கதையாக பேசி கூறி வருவது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படி ஒரு தகவலை உறுதிபடுத்திக் கொண்ட வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இதுபோன்ற உதவி காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கிறேன் என்று சொல்லி அவரை பேரணாம்பட்டிலிருந்து வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் குற்றப்பிரிவுக்கு பணியிடம் மாற்றம் செய்துள்ளார்.

இதுதான் காவல் துறையில் துறை ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கையா? என்பது நகைப்பை வரவைக்க கூடிய விஷயமாக பொதுமக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

இப்படி ஒழுங்கீனமாக நடந்து கொண்ட ஒரு சீருடை பணியாளர் மீது எடுக்கப்படும் நடவடிக்கையா? இது என்பது மேலும் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தவறு செய்பவர்கள் குறைந்தபட்சம் காவல் நிலையங்களில் இருந்து ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள்.

ஆனால் இந்த தேவபிரசாத் விஷயத்தில் அது கூட நடைபெறாமல் ஒரு காவல் நிலையத்திலிருந்து மற்றொரு காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவர் வாரி குவித்துள்ள சொத்துக்கள் எவ்வளவு?. இவர்கள் சொந்தக்காரர்கள், உறவினர்கள், நண்பர்கள் என்று யார்? யார்? மீது எவ்வளவு சொத்துக்களை வாரி குவித்துள்ளார் என்பது புரியாத புதிராக உள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரும் இவர் மீது ஒரு கண் வைத்து நடவடிக்கையை துரிதப்படுத்தினால் ஒரு பெரிய திமிங்கலத்தை வெளிக்கொண்டு வந்த பெருமை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ஏற்படும் என்பதும் நிதர்சன உண்மை.

ஆனால் அப்படி எதுவும் செய்யாமல் லஞ்ச ஒழிப்புத்துறையும் அமைதி காத்து வருகிறது .அளவுக்கு அதிகமாக அதாவது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை வாரிக் குவித்துள்ள உதவி ஆய்வாளர் தேவபிரசாத்தை பார்த்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகமே அஞ்சி நடுங்குகிறதா? என்ற எண்ணம் பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள், நடுநிலையாளர்கள் மத்தியில் ஒரு பேசு பொருளாகவே மாறி உள்ளது.

காவல்துறையை கையில் வைத்துக் கொண்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் இதுகுறித்து ஏதாவது நடவடிக்கை எடுப்பாரா? அல்லது இதே போன்று கண்டும் காணாமல் விட்டு விடுவாரா? என்றும் தெரியவில்லை.

டிஜிபி சைலேந்திரபாபு இந்த பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு நடந்தது என்ன? என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு கள்ளச்சாராய சாவில் எப்படி நடவடிக்கையை துரிதகதியில் எடுத்து காவல்துறையின் கண்ணியத்தை காப்பாற்றினாரோ அது போன்று,

காவல்துறை கண்ணியமிக்க ஒரு துறை அதில் பணியாற்றும் ஒரு உதவி ஆய்வாளர் கருப்பு ஆடு போல செயல்பட்டு கண்ணியத்தை கெடுத்து காவல்துறையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி இதுபோன்ற சாராய வியாபாரிகளுடன் கைகோர்த்துக் கொண்டு பணத்தை வாரி குவித்துள்ளதை கண்டும் காணாமல் விடுவது ஏற்புடையதாக இல்லை என்கின்றனர் வேலூர் மாவட்ட பொதுமக்கள் மட்டும் இன்றி தமிழக பொதுமக்களும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதலால் இதுபோன்ற காவல் துறையில் உள்ள கருப்பு ஆடுகள் மீது கடும் நடவடிக்கையை தமிழக அரசும், காவல்துறை தலைவரும் எடுத்தால் தான் பொது மக்களுக்கு காவல்துறையின் மீது ஒரு பெரிய நன் மதிப்பும், நம்பிக்கையும் ஏற்படும் என்பது மறுக்க முடியாத உண்மை.

ஆதலால் தமிழக அரசும் ,காவல்துறை தலைவரும் உதவி ஆய்வாளர் தேவபிரசாத் செய்த தவறுக்கு அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended