• முகப்பு
  • அரசியல்
  • கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சிக்கு, மக்கள் சம்மட்டி அடி கொடுத்துள்ளனர் - வேல்முருகன்.

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சிக்கு, மக்கள் சம்மட்டி அடி கொடுத்துள்ளனர் - வேல்முருகன்.

மேலப்பாளையம் ஹஸன்

UPDATED: May 14, 2023, 6:29:38 PM

திருநெல்வேலியை அடுத்துள்ள மேலப்பாளையத்தில், இன்று (மே.14) காலையில் நடைபெற்ற, தம்முடைய கட்சி நிர்வாகி ஒருவர் மகளின் திருமணத்திற்காக, திருநெல்வேலிக்கு வந்திருந்த, தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் தலைவரும், பண்ருட்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான தி.வேல் முருகன், திருநெல்வேலியில் நிருபர்களுக்கு, பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு, தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளில், பெரும்பாலானவற்றை, இந்த இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவேற்றி, சாதனை படைத்துள்ளது.

அதற்காக தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இரண்டு ஆண்டுகளை சிறப்பாக முடித்து, மூன்றாவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள தி்.மு.க.அரசானது கடந்த 2 ஆண்டுகளில், எல்லாத்தரப்பு மக்களும் பயன்பெறக்கூடிய வகையில், நல்ல பல திட்டங்களை நிறைவேற்றி உள்ளது.

குறிப்பாக கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் நிதியுதவி, அதுபோல் குடும்பத் தலைவிகளுக்கும், ஆயிரம் ரூபாய், உரிமைத்தொகை, இல்லம் தேடி கல்வி, இல்லம் தேடி மருத்துவம், இப்படி பல நலத்திட்டங்களை, தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

இப்படி சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழக அரசுக்கு, ஒன்றிய பா.ஜ.க. அரசு, பல வழிகளிலும் இடையூறுகளை செய்து வருகிறது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும், தமிழக அரசுக்கு தொடர்ந்து நெருக்கடியை கொடுத்து வருகிறார்.

எடுத்துக்காட்டாக சொல்லப்போனால் பள்ளி விழாக்கள், கல்லூரி விழாக்கள் போன்றவற்றில், இந்துத்துவா சனாதன கருத்துக்களை, புகுத்தி வருகிறார்.தமிழ்நாடு என்பதை, தமிழகம் என்று கூறும்படியாக, சர்ச்சைக்குரிய கருத்தைக்களை பரப்பி வருகிறார்.

"தந்தை" பெரியாரின், சமத்துவ நீதிக் கொள்கைகளை, இடைவிடாது குறை கூறி வருகிறார். ஆளுநராய் உள்ளவர்களுக்கு, எந்த அதிகாரமும் கிடையாது. அனைத்து அதிகாரங்களும், மாநில அரசுக்கே இருக்கின்றன! என்று, உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த, கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில், பாரதீய ஜனதாவுக்கு அம்மாநில மக்கள் சம்மட்டி அடி கொடுத்துள்ளனர். பாரதீய ஜனதா கட்சியின் இந்துத்துவா சனாதன கருத்துக்கள், அங்கு எடுபடவில்லை. சிறுபான்மையின மக்களை பகைத்துக் கொண்டதால், பாரதீய ஜனதாவுக்கு சரியான பாடத்தை, கர்நாடக மக்கள் புகட்டி உள்ளனர்.

இதுபோல அடுத்த ஆண்டு (2024) நடைபெறவுள்ள நாடாளுமன்ற மன்றத்தேர்தலும், தமிழக மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும். நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் வாடி வருகிற கைதிகளை, தமிழக அரசு விடுதலை செய்ய முன்வர வேண்டும். இது பற்றி, சட்டமன்ற கூட்டத்தொடரிலும் நான், பேசியுள்ளேன்!"

இவ்வாறு, தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர்- தலைவர் தி.வேல் முருகன் எம்.எல்.ஏ. திருநெல்வேலியில், செய்தியாளரிடம் தெரிவித்தார். அப்போது, கட்சியின் மாநில- மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended