செஞ்சி தற்காலிக பேருந்து நிலையத்தில் பயணிகள் நடந்து செல்ல முடியாத அவலம்!

வாசுதேவன்

UPDATED: May 11, 2023, 3:21:02 PM

விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சியில் திண்டிவனம் செல்லும் சாலையில் பயணியர் மாளிகை அருகே தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.

இந்த பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு எந்த வித அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை. குறிப்பாக சொல்லப்போனால் குடிப்பதற்கு தண்ணீர் முதல் கழிவறை வசதி வரை எதுவும் சரியாக கிடையாது.

இப்படி அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்பது ஒருபுறம் இருந்தாலும் இரவு நேரங்களில் மின்விளக்கு வசதி மற்றும் நடந்து செல்ல இயலாத அளவுக்கு சேரும், சகதியும் ஆகவும், பல்லாங்குழி போல குண்டும், குழியுமாகவும் அந்த பேருந்து நிலையம் உருமாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில் வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் சொல்லொனா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். செஞ்சி பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் பராமரிக்கப்படும் இந்த கட்டண கழிப்பறையில் அதிரடியாக உள்ளே கால் வைத்தாலே தலா  10 வசூலிக்கப்படுகிறது.

இது ஒரு அமைச்சர் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. செஞ்சி தொகுதியில் அமைச்சர் மஸ்தான் வலம் வந்து கொண்டுள்ளார். இவரது மகன் செஞ்சி பேரூராட்சி தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார்.

இப்படி தந்தையும், மகனுமாக செஞ்சியை ஒரு வழியாக உருமாற்றி வருகின்றனர் என்பதற்கு இந்த தற்காலிக பேருந்து நிலையத்தை ஒரு சான்றாக எடுத்துக் கொள்ளலாம்.

தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்படுகிறது என்றால் அதற்கு ஓடுதளம் குறிப்பாக தார் மற்றும் சிமெண்ட் உள்ளிட்ட தரை தளத்தை அமைத்துவிட்டு பிறகு தான் பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய வேண்டும்.

ஆனால் இங்கு மொரம்பு மண் கொட்டிய பகுதியை ஓடுதளமாக பயன்படுத்தி வருகின்றனர். இது அண்மையில் பெய்த மழையில் இருந்து மிகவும் மோசமான நிலைக்கு உருமாறி பயணிகள் நடந்து செல்ல முடியாத அளவிற்கு ஏன் கால் வைக்கவே முடியாத நிலைக்கு மாற்றம் அடைந்துள்ளது.

இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர், மழை வந்தால் ஒதுங்குவதற்கு ஒரே ஒரு கொட்டகை மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. அந்த கொட்டகையும் 50 பேருக்கு மேல் நிற்க முடியாத வகையில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

மழை பெய்தால் அந்த கொட்டகையும் ஒழுகும் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி அடுக்கடுக்கான குறைபாடுகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

ஒரு அமைச்சர் தொகுதியில் பொதுமக்கள் படும் இன்னல்களுக்கு அளவே இல்லை என்று சொல்லும் அளவிற்கு நிலைமை படு மோசமாக சென்று கொண்டுள்ளது.

இப்படி மக்களின் நலனில் அக்கறை இல்லாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று காரில் வலம் வந்து கொண்டுள்ளார் இந்த அமைச்சர்.

இவர் ஏற்கனவே அமைச்சர் பொன்முடியின் விசுவாசியாக இருப்பது போல் நடித்து இன்றைக்கு அமைச்சர் பதவிக்கு உயர்ந்துள்ளார். ஆனால் பொது மக்களுக்கு என்னென்ன நன்மைகளை செய்ய வேண்டும் என்பதை என்னென்ன தேவைகள் இருக்கிறது என்பதையும் அவர் அறியாமல் போனது எப்படி என்பது வியப்பாக உள்ளது.

தற்போது தான் பால்வளத்துறை அமைச்சர் நாசர் அமைச்சர் பொறுப்பில் இருந்து தமிழக முதல்வர் ஸ்டாலினால் தூக்கி எறியப்பட்டுள்ளார்.

அமைச்சர்கள் பொதுமக்கள் நலனில் அக்கறை செலுத்தாமல் வேறு எதில் அக்கறை செலுத்துகின்றனர் என்பது புரியாத புதிராக உள்ளது.

ஏற்றிவிட்ட ஏணியை மறந்த அமைச்சர் மஸ்தான் பொதுமக்களுக்கு அப்படி என்ன செய்து விடப் போகிறார் என்பது இதுவரை விடை தெரியாத கேள்வியாக உள்ளது.

செஞ்சி தொகுதி மக்கள் அமைச்சர் தொகுதி என்று சொல்லிக் கொள்ளும் அளவுக்கு அந்தத் தொகுதியில் வேறு எந்த வளர்ச்சி பணிகளும் நடந்ததாக தெரியவில்லை என்று கூறி முணுமுணுக்கத் தொடங்கியுள்ளனர்.

இரண்டு ஆண்டுகளை கடந்த நிலையில் மீதமுள்ள மூன்று ஆண்டுகளில் செஞ்சி தொகுதியை மினி சிங்கப்பூராக மாற்றி காட்டுவாரா? அமைச்சர் மஸ்தான் என்பதை அவரும் அவரது பணியும் அவரை அமைச்சராக நியமித்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் தான் வெளிச்சம் என்கின்றனர் செஞ்சி தொகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் நடுநிலை யாளர்கள் என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை.

இனிவரும் காலங்களிலாவது தனது செயல்பாடுகளை மாற்றிக் கொண்டு மக்கள் பணியில் நாட்டம் செலுத்துவாரா அல்லது வழக்கம்போல் தனது பணியை பார்த்துக் கொண்டு செல்வாரா என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் செஞ்சி தொகுதியின் அமைச்சர் மஸ்தான் மீது சாட்டையை சுழற்றுவாரா? அல்லது அமைச்சர் நாசர் மீது எடுத்தது போன்ற ஒழுங்கு நடவடிக்கையை எடுத்து அவரது அமைச்சர் பதவியை பறிப்பாரா? என்பதும் போகப் போகத்தான் தெரியும்.

பொறுத்திருந்து பார்ப்போம்.

VIDEOS

RELATED NEWS

Recommended