• முகப்பு
  • ஆன்மீகம்
  • பரமக்குடி ஸ்ரீ சுந்தரராஜப்பெருமாள் பல வர்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் கள்ளழகர் வேடம் பூண்டு பச்சை பட்டு உடுத்தி சாரல் மழையுடன் வைகையாற்றில் இறங்கினார்.

பரமக்குடி ஸ்ரீ சுந்தரராஜப்பெருமாள் பல வர்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் கள்ளழகர் வேடம் பூண்டு பச்சை பட்டு உடுத்தி சாரல் மழையுடன் வைகையாற்றில் இறங்கினார்.

மாமுஜெயக்குமார்

UPDATED: May 5, 2023, 10:30:57 PM

சித்திரை மாதம் பிறந்தவுடனே மதுரை, பரமக்குடி கள்ளழகர் திருவிழா தான் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்படுவது மட்டுமல்ல, கள்ளழகரை தரிசிக்க மக்கள் வெள்ளமென திரண்டு வருவதும் காலம்...காலமாய் நடந்து வருகிறது.

இந் நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஸௌராஷ்ட்ர பிராஹ்மண மஹாஜனங்களுக்கு சொந்தமான ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கோவிலின் கோடைத்திருவிழா என்னும் சைத்ரோத்ஸவம் 12 நாட்கள் கோலாகலமாக நடைபெறுகிறது.

கடந்த 30-ந் தேதி ஞாயிறு கோடைத் திருவிழா ஆரம்பமாகி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

இதனையொட்டி, திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக மதுரைக்கு இணையாக 05-ந் தேதி வெள்ளி விடியற் காலை 03.58 -மணிக்கு ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள், கள்ளழகர் வேடம் பூண்டு பச்சை பட்டு உடுத்தி பல வர்ண மலர்களால் சூழப்பட்ட பூப்பல்லக்கில் வீற்றிருந்து வெள்ளி கிண்ணத்தில் தயிர்சாதம் சாப்பிட்டு, கருப்பணசுவாமியிடம் விடைபெற்றுக் கொண்டு பெருமாள் கோவில் படித்துரையின் வைகையாற்றில் சாரல் மழையுடன், வாணவேடிக்கைகள் முழங்க, தீவட்டி வெளிச்சத்தில் இறங்கினார்.

பச்சை பட்டு உடுத்தி, வெள்ளி கிண்ணத்தில் தயிர் சாதம் சாப்பிட்டு இறங்கியதால் இந்த வருடம் நன்கு மழை பொழியும், நாடு செழிப்பாக இருக்கும் என்பது ஐதீகம்.

அதுசமயம் வைகையாற்றில் வெள்ளமென திரண்டிருந்த பக்தர்கள் கூட்டம் " கோவிந்தா...கோவிந்தா..." என விண்ணை முட்டும் அளவில் கரகோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

வைகையாற்றில் இறங்கிய கள்ளழகர் பற்பல மண்டகப்படிகளுக்குச் சென்று பக்தர்களுக்கு காட்சியளித்து விட்டு, மேலச்சத்திரம் பகுதியில் அமைந்துள்ள தல்லாகுளம் மண்டகப்படியை சென்றடைந்தார்.

தொடர்ந்து, அன்று காலை சுமார் 10.05 - மணிக்கு கள்ளழகர் தங்க குதிரையில் வீற்றிருந்து தல்லாகுளம் மண்டகப்படியிலிருந்து வெளியேறி அங்கு கூடியிருக்கும் பல ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலித்தார்..அது சமயம் கூடியிருக்கும் பக்தர்கள் கூட்டம் விண்ணை முட்டும் அளவிற்கு 

" கோவிந்தா...கோவிந்தா..." என கரகோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

கடந்த 7 நாட்களாக விரதம் இருந்து நேர்த்திக்கடனாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரைச் சுற்றிலும் நின்று பீச்சாங்குழல் என்னும் துருத்தி மூலம் மஞ்சள் நீரை பீய்ச்சி அடித்தனர்.

கள்ளழகர் மக்கள் வெள்ளத்தில் நீந்தியபடி காலை முதல் பற்பல மண்பகப்படிகளுக்குச் சென்ற கள்ளழகர் இரவு வண்டியூர் எனும் காக்காத்தோப்பை சென்றடைவார். பீச்சாங்குழல் பக்தர்கள் இரவு வரை மஞ்சள் நீரை பீய்ச்சி அடித்து வருவர்.

இரவு பெருமாள் கோவில் படித்துறை, காக்காத்தோப்பு வைகையாற்றில் பரமக்குடி, எமனேஸ்வரம், மதுரை, ராமநாதபுரம், சத்திரக்குடி, இளையான்குடி மட்டுமல்லாது தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும், மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளிலிருந்து வந்திருந்தவர்கள்,

சுற்றுப்புற கிராம மக்கள் குடும்பத்தோடு வைகையாற்று மணலில் அமர்ந்து குழந்தைகள் குடும்பத்தினருடன் அறுசுவை உணவுகள், ஸ்நாக்ஸ் சாப்பிட்டும், அங்கு அமைக்கப்பட்டிருந்த ஜெயின்வீல், படகு, கப் அன் சாசனம் போன்ற பல்வேறு ராட்டினங்களில் அமர்ந்து சுற்றியும், மினி சர்க்கஸ்ஸில் குழந்தைகள் கண்டு ரசிக்கவும் திருவிழாவை மகிழ்ச்சியுடன் கண்டு களிப்பர்.

ஆற்றுப் பாலம் பகுதியில் இருந்து ஆயிரம் பொன் சப்பரத்தை வைகையாற்றில் சுமார் 2 கி.மீ.தூரம் பக்தர்கள் இழுத்துச் சென்று காக்காத்தோப்பை சென்றடைவர்.அங்கு ஆயிரம் பொன் சப்பரத்தினுள் கள்ளழகரை கொடுத்து வாங்குவர்.

பரமக்குடியில் கள்ளழகர் பூப்பல்லக்கில் எழுந்தருளி வைகையாற்றில் இறங்கி வண்டியூர் எனும் தல்லாகுளத்தில் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி வலம் வருவார்.

மதுரை, மானாமதுரையில் கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி வைகையாற்றில் இறங்கி வண்டியூரில் பூப்பல்லக்கில் எழுந்தருளி காட்சி தருவது நடைமுறை பழக்கமாக உள்ளது.

06-ந் தேதி சனி இரவு வாணியர் உறவின் முறையார்களின் மண்டகப்படியில் கள்ளழகர் விடிய... விடிய... தசாவதாரக் காட்சிகளில் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

தொடர்ந்து, வைகையாற்றுக்குள் மட்டா, கிரி மண்டகப்படிகளில் வீற்றிருந்து அருள் பாலித்த கள்ளழகர் 08-ந் தேதி திங்கள் காலை அழகிய பல வர்ண மலர்களால் சூழப்பட்ட பூப்பல்லக்கில் கள்ளழகர் வீற்றிருந்து வைகையாற்றிலிருந்து புறப்பட்டு நகரின் பல வீதிகளிலும் நகர் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்து மாலை சுமார் 06.03 மணியளவில் கோவிலுனுள் சென்றடைவார்.

இரவு பெருமாள் கண்ணாடி எதிர்சேவை நடைபெறும்.

10-ந் தேதி புதன் உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. 11-ந் தேதி வியாழன் வாணியர் உறவின் முறையார்கள் சார்பில் பாலாபிஷேகம் நடைபெறும்.

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் மானேஜிங் டிரஸ்டி குடுகுச்சி டி.ஆர்.நாகநாதன், டிரஸ்டி அன்டு டிரஷரர் குச்சேரி கே.ஆர்.பாலமுருகன், டிரஸ்டிகள் சலகவா எஸ்.என்.நாகநாதன், ஜி.என்.கோவிந்தன், பி.கே.முரளிதரன் ஆகியோர் சிறப்பாக செய்துள்ளனர்.

திருவிழாவை யொட்டி, கோவில் கோபுரங்கள், கோவில் வளாகம், படித்துறை பகுதிகள் சர்வீஸ் சாலை, தல்லாகுளம் உள்பட நகர் முழுவதும் பல வர்ண மின் விளக்குகள், டியூப்லைட், போகஸ் லைட்டுகள் அலங்கரிக்கப்பட்டு நகரமே விழாக்கோலம் பூண்டு காட்சியளிக்கிறது.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended