• முகப்பு
  • other
  • மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமினை துவக்கிவைத்து, 1,463 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய அமைச்சர் சா.சி.சிவசங்கர்.

மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமினை துவக்கிவைத்து, 1,463 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய அமைச்சர் சா.சி.சிவசங்கர்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட நிர்வாககங்கள் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் இணைந்து நடத்திய மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள் இன்று (25.06.2022) மேலமாத்துார் ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளியில் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் திரு. கொ.வீர ராகவ ராவ் இ.ஆ.ப., அவர்கள், பெரம்பலுார் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா இ.ஆ.ப., அவர்கள், அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பெ.ரமண சரஸ்வதி இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் தலைமை தாங்கினர். தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் கே.ஜெகதீசன் அவர்கள், பெரம்பலுார் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன், அரியலுார் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இம்முகாமை துவக்கி வைத்து மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது: படித்த இளைஞர்கள் அனைவருக்கும் அவரவர் கல்வித்தகுதிக்கேற்ற வேலைவாய்ப்புகளை உருவாக்கித்தர வேண்டும் என்பதே தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நோக்கம். அதனப்படையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க அனைத்து மாவட்டங்களிலும் இதுபோன்ற தனியார் வேலைவாய்ப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் தமிழக மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் பெற வேண்டும். கல்வி பயின்று முடித்தவர்களுக்கு அவரவர் கல்வித்தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பாடுபட்டு வருகிறார்கள். ஐக்கிய அமீரக நாடுகளுக்குச் சென்று அங்கிருந்து தமிழகத்திற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். பலருக்கும் வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் அதிக தொழில் முதலீடுகளையும், தொழிற்சாலைகளையும் தமிழகத்தில் அமைப்பதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்றது முதல் தற்போது வரை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில் இதுவரை 61 முகாம்கள் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு, சுமார் 88,000 நபர்களுக்கு வேலைவாய்பபுகள் அளிக்கப்பட்டுள்ளது என்பது பெருமைக்குரிய தகவலாகும். இந்த வேலைவாய்ப்பு முகாமிற்கு வந்திருக்கின்ற சகோதர சகோதரிகளுக்கு ஒரு வேண்டுகோள். நமக்கு உள்ளுரிலேயே வேலை கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தை கைவிட்டு, வேலை எங்கு கிடைத்தாலும் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். கிடைக்கின்ற இடத்தில் வேலையில் சேர்ந்து உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். எனது தந்தை சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் நான் எனது பொறியாளர் படிப்பை முடித்தேன். ஆனாலும், பெங்களுருக்குச்சென்று எனக்கு கிடைத்த பணியை செய்தேன். அதேபோல உலகம் முழுவதும் நம் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் சென்று பணியாற்றி வருகின்றனர். சிங்கப்பூர் மலேசியா சென்று இருக்கும்போது நல்ல பெரிய பெரிய நிறுவனங்களில் முக்கியமான பதவியில் இருக்கிறார்கள். எனவே, இன்று இந்த முகாமில் பங்குபெற்றிருக்கின்ற இளைஞர்கள் பெரிய பணிகளில் பொறுப்பேற்று சமுதாயத்தில் உயர்ந்தவர்களாக உருவாக வேண்டும். இன்றைய முகாமில் 202 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளனர். எனவே, உங்கள் கல்வித்தகுதிக்கும், விருப்பத்திற்கும் ஏற்ப நிறுவனங்களை தேர்வு செய்து நேர்காணலை எதிர்கொண்டு பணிவாய்ப்பினை பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். இன்று வேலைவாய்ப்பு பெறுகின்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். இவ்வாறு தெரிவித்தார். இன்றைய முகாமில் 3,641 ஆண்களும், 5,072 பெண்களும் என மொத்தம் 8,713 நபர்கள் கலந்துகொண்டார்கள். இதில் 576 ஆண்களுக்கும், 878 பெண்களுக்கும் என மொத்தம் 1,463 நபர்கள் வேலைவாய்ப்புக்கான பணிநியமன ஆணைகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார். இந்த முகாமில் இரண்டாம் கட்ட தேர்வுக்கு 876 நபர்கள் தேர்வாகியுள்ளனர். அயல்நாட்டு வேலை வாய்ப்பிற்கு 123 நபர்கள் தேர்வாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சி.ராஜேந்திரன், அரியலூர் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பொ.சந்திரசேகரன், மாவட்ட வருவாய் அலுவலர் நா.அங்கயற்கன்னி, வேலைவாய்ப்புத்துறை திருச்சி மண்டல இணை இயக்குநர் மு.சந்திரன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கு.இராதாகிருஷ்ணன், ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர்கள் ந.கிருஷ்ணமூர்த்தி (ஆலத்துார்), க.ராமலிங்கம் (வேப்பந்தட்டை), பிரபாசெல்லப்பிள்ளை(வேப்பூர்), மேலமாத்துார் ஊராட்சி மன்றத்தலைவர் மு.மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended