Author: THE GREAT INDIA NEWS

Category: world

வைதவ்யம்(கணவனை இழந்த மனைவியின் நிலை) கணவனை இழந்த ஒரு பெண் விதவை என்று அழைக்கப்படுகிறாள். இந்த வார்த்தை கேட்பதற்கே சங்கடம் தரும் ஒரு சொல் என்றால், அந்த நிலையை எய்தும் ஒரு பெண்ணின் மனனிலை எப்படி இருக்கும் !!! புறனானூற்றில் ஒரு பாடல் புறநானூறு பாடல் 246:– பல் சான்றீரே! பல் சான்றீரே! ‘செல்க’ எனச் செல்லாது, ‘ஒழிக’ என விலக்கும், பொல்லாச் சூழ்ச்சிப் பல் சான்றீரே! அணில்வரிக் கொடுங்காய் வாள் போழ்ந்திட்ட காழ் போல் நல் விளர் நறு நெய் தீண்டாது அடை இடைக் கிடந்த கை பிழி பிண்டம், வெள் எள் சாந்தொடு, புளிப்பெய்து அட்ட வேளை வெந்தை, வல்சி ஆக, பரற்பெய் பள்ளிப்பாயின்று வதியும் உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ; .................பாண்டிய மன்னன் இறந்தவுடன் அவனது மனைவி பூதப்பாண்டியன் தேவி இப்படிப் பாடுகிறாள். "கணவனுடன் நீயும் போ என்று சொல்லாமல் பொல்லாத செயல் புரியும் பெரியோர்களே! கணவன் இல்லாத பெண்கள் வெள்ளரிக்காய் விதை போல, நெய் இல்லாத சோறு, எள்ளுத் துவையல், புளி கூட்டி சமைத்த வேள இலை ஆகியவற்றை உண்ண வேண்டும். பாய் இல்லாமல் வெறும் கல் தரையில் படுக்க வேண்டும். அது போன்ற பெண் என்று என்னை நினைத்து விட்டீர்களா? நான் அப்படிப்பட்டவள் அல்ல." என்று மேலும் பல சொல்லி கணவனை எரிக்கும் சிதையில் விழுந்து மறைகிறாள். ஒரு விதவையாக அவள் எப்படி வாழ வேண்டும் என்று இந்த சமூகம் சொல்கிறதோ அப்படி வாழ்வதை விட தீயில் விழுந்து எரிந்து சாவதே மேல் என்று அன்றைய பெண்கள் நினைத்திருக்கக் கூடும். அதற்குப் பிறகு 1829 ல் வில்லியம் பெண்டின்க் பிரபு இதை எதிர்த்து சட்டம் இயற்றியதும், ராஜா ராம் மோஹன் ராய் சதி என்னும் உடன் கட்டை ஏறும் முறையை ஒழிக்கப் பாடுபட்டதும் வரலாறு. இரண்டு தலைமுறைக்கு முன்பு வரை விதவைப் பெண்கள் தலையை மழிப்பதும், வெள்ளைச் சேலை அணிந்து தங்கள் அழகைக் குலைத்துக் கொள்வதும் நடந்து கொண்டுதான் இருந்தன. இவை எல்லாமே ,சமூகத்தில் விதவைப் பெண்கள் என்னவிதமான கண்ணோட்டத்தில் பார்க்கப் படுகிறார்கள்,நடத்தப் படுகிறார்கள் என்பதற்கு சான்று.கடந்த 50 வருடங்களில், விதவைகளின் புறத்தோற்றத்தில் இந்தக் கட்டாய மாற்றங்கள் ஒழிந்து விட்டன அல்லது குறைந்து விட்டன.அல்லது அவர்களாகவே நான் இப்படித்தான் இருப்பேன் என்று மாறி விட்டனர். ஆனால் இந்த 2022 வருடம் வரை மாறாதது என்ன தெரியுமா ? சமூகம் அவர்களை நடத்தும் விதம், குடும்ப உறுப்பினர்கள், அம்மா,அப்பா,அக்கா,தங்கை,உறவினர்கள்,நட்புக்கள்,சமூக உறுப்பினர்கள் உட்பட. இன்றும்,போன வாரமும்,பத்து நாட்களுக்கு முன்பும்,மூன்று மாதத்திற்கு முன்பும் என்னிடம் பேசும் ஒவ்வொரு விதவைப் பெண்ணும் இப்படி ஒரு அவலத்தை என்னிடம் வெளிப்படுத்தும் போது எனக்கு ஆற்றாமையாக இருக்கிறது. "என் அம்மாவே சொன்னாங்க மேடம், நீ மஞ்சள் பூசிக் குளிக்கக் கூடாது என்று......" " தனி மனுஷியாக என் மகளுக்கு எல்லாம் பார்த்துப் பார்த்து நான் ஏற்பாடு செய்த கல்யாணத்தில் ,தாலி கட்டும் போது நான் பக்கத்தில் நிற்கக் கூடாதுந்னு சொல்றாங்க ...." " என் வீட்டுல நான் வரலஷ்மி பூஜை பண்ணினா,அக்கம் பக்கத்துல அவ்வளவு பேச்சு பேசறாங்க..." " இன்னைக்கும் நான் வெளில கிளம்பினா எதிர்ல வர பிளாட்காரங்க சகுனம் சரியில்லான்னு உள்ள ஓடிப் போறாங்க.என்னத் திட்டறாங்க...." " வீட்டுக்காரனே போய்ட்டான்.இது என்ன இப்படி பேண்ட் சட்டை போட்டுக்கிட்டு சுத்துது...." " புருஷன் செத்து போய் தனியா இருக்கா , கேரக்டர் எப்படி இருக்குமோன்னு எனக்கு நேரயே பேசறாங்க மேடம்" .............இதையெல்லாம் கேட்கும் போது எனக்கு காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றினாற் போல் இருக்கிறது. இப்படிப் பேசுபவர்கள் எல்லோருமே பெண்கள் என்பதுதான் தாங்க முடியாத வலி. இதையெல்லாம் கடந்துவந்தவள் என்கிற வகையில் என் ஆச்சரியம் என்னவென்றால் இந்த 2022 வரை பெண்கள் இன்னும் இப்படி இருக்கிறார்களே என்பதுதான். "பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்,பாரினில் பெண்கள் நடத்தவந்தோம் ..."என்பதெல்லாம் இருக்கட்டும். முதலில் பெண்கள் கனிவோடு இருக்கப் பழகிக் கொள்ளுங்கள். அவரவர் வாழ்க்கை அவரவர் விருப்பம், அவரவர் திறமை. இதைப் புரிந்து கொள்ளுங்கள்.சாஸ்திரம்,சம்பிரதாயம் என்ற (உங்களுக்கே முழுதாகப் புரியாத)விஷயங்களை வைத்துக் கொண்டு மற்றவர்களைக் காயப் படுத்தாதீர்கள்.யாருக்கும் எந்த நிலைமையும் வர ஒரு நொடி போதும். நான் அப்படியெல்லாம் இல்லை என்று சொல்லும் பெண்களுக்கானது அல்ல இந்தப் பதிவு. இதையெல்லாம் மாற்ற இன்னொரு ராஜா ராம் மோஹன் ராய் தான் வரவேண்டும் என்றில்லை. உங்கள் மனதைக் கேட்டுக் கொள்ளுங்கள்,இந்த நிலை மாற நான் என்ன செய்யலாம் என்று. நல்ல மாற்றம் தானே வரும் !! *அனுபவஸ்தன்*

Tags:

#இன்றையசெய்திகள்தமிழ்நாடு #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழகம் #நகராட்சி #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnadunewstodaytamil #tamilnaduflashnewstamil #corporation
Comments & Conversations - 0