இடம் மாறியது நீட் விலக்கு மசோதா ?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தமிழ்நாடு ஆளுநர் அனுப்பி வைத்த "நீட்" தேர்வு விலக்கு மசோதா மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து, மத்திய சட்ட அமைச்சகத்திற்கு கை மாறியது. இதனையடுத்து, ஒன்றிய சட்ட அமைச்சகம் சார்பில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சட்ட வல்லுனர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு, 90 நாள்களுக்குள் அதன் பரிந்துரை, மீண்டும் உள்துறை அமைச்சகத்துக்கு அளிக்கப்படும். பிறகே இந்த மசோதா, ஜனாதிபதியிடம் ஒப்புதலுக்கு செல்லுமா? என்ற கேள்விக்கு விடை காணவரும். மருத்துவக் கல்லுாரி மாணாக்கர் சேர்க்கைக்கான, "நீட்" தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி, தமிழக சட்ட சபையில், 2021 செப்டம்பர் மாதம் 13 ந்தேதி மசோதா நிறை வேற்றப்பட்டது. அதை மறு பரிசீலனை செய்யும் படி கூறி, மசோதாவை ஆளுநர் ரவி, பிப்ரவரியில் சபா நாயகருக்கு திருப்பி அனுப்பினார். இதனையடுத்து, நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரும் மசோதா, 2022 பிப் 10 ஆம் தேதி சட்ட சபையில் 2 ஆவது முறையாக நிறை வேற்றப் பட்டது. இந்த மசோதாவை, சபா நாயகர் அப்பாவு, ஆளுநர் ரவிக்கு உடனடியாக அனுப்பினார். 2 ஆவது முறையாக நிறை வேற்றப்பட்ட மசோதாவை, ஆளுநரால் திருப்பி அனுப்ப முடியாது. எனவே, அவர் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆனால், ஆளுநர் ரவி, மசோதாவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்பி வைக்காததால், தமிழக அரசுக்கும், ஆளுநர் ரவிக்கும் மோதல் ஏற்பட்டது. ஆளுநர் கண்டித்து, தி.மு.க வினர் போராட்டங்கள் நடத்தினார்கள். இதனால், "நீட்" தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரும் மசோதாவை, ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக, ஆளுநர் ரவி, ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார் என, சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று முன் தினம் தெரிவித்தார். அதையடுத்து, ஒன்றிய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்ததாவது ஒன்றிய உள்துறை இணைச் செயலருக்கு, தமிழக ஆளுநர் ரவி, 8 பக்க கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில், தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரும் மசோதாவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற வேண்டும் என கூறியிருந்தார். அது பற்றி, உள் துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தெரிவிக்கப் பட்டது. அவர் அந்த மசோதா குறித்து ஆய்வு செய்து பரிந்துரைக்குமாறு, ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு வை கேட்டுக் கொண்டார். அதையடுத்து, நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா, ஒன்றிய சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த மசோதா குறித்து, சட்ட அமைச்சகம் தரப்பில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சட்ட வல்லுனர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு, பிறகு, பரிந்துரையை தொன்னூறு நாட்களில் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கும். பிறகே இந்த மசோதாவை, மத்திய உள்துறை அமைச்சகம், ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கும். மேற்கண்டவாறு ஒன்றிய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் ஜூலை 25ம் தேதியுடன் முடிகிறது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம், நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை, ஜனாதிபதிக்கு அனுப்புவதற்குள், புதிய ஜனாதிபதி தேர்தல் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. அதனால், இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது பற்றி, புதிய ஜனாதிபதி தான் முடிவு செய்ய வேண்டும் என, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக, டில்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. அதனால், புதிய ஜனாதிபதி பதவியேற்ற பின், இந்த மசோதா அவருக்கு அனுப்பி வைக்கப்படலாம். அவரும் மசோதா பற்றி சட்ட வல்லுனர்களிடம் ஆலோசித்து, ஒப்புதல் அளிப்பது பற்றி முடிவு செய்வார் என்றும் டில்லி வட்டாரங்கள் தெரிவித்தன. அதனால், நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா மீது முடிவெடுக்க காலதாமதமாகும் என தெரிய வந்துள்ளது. செய்தியாளர் பா. கணேசன்.

VIDEOS

RELATED NEWS

Recommended