• முகப்பு
  • district
  • வெளிமாவட்ட மக்களுக்கே பயன் தரும் தேனிரயில்; பகலிலும் இயக்க தேனி மக்கள் எதிர்பார்ப்பு!!

வெளிமாவட்ட மக்களுக்கே பயன் தரும் தேனிரயில்; பகலிலும் இயக்க தேனி மக்கள் எதிர்பார்ப்பு!!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

வெளிமாவட்டங்களில் இருந்து தேனி வந்து சுற்றுலாத்தலம் மற்றும் பாரம்பரிய கோயில்களை தரிசிக்கும் வகையிலேயே மதுரை-தேனி ரயிலின் நேர அட்டவணை அமைந்துள்ளது. இதனால் உள்ளூர் மக்களுக்கு இந்த ரயில் பெரியளவில் பலன் தராத நிலையே உள்ளது. அகல ரயில் பாதைப் பணிகள் முடிந்து, மதுரையில் இருந்து தேனிக்கு கடந்த மாதம் 26-ம் தேதி ரயில் சேவை தொடங்கியது. மதுரையில் இருந்து தினமும் காலை 8.20 மணிக்கு கிளம்பும் ரயில் (06701) தேனிக்கு 9.35 மணிக்கு வருகிறது. அதன்பிறகு, மாலை 6.15 மணிக்கு தேனியில் இருந்து கிளம்பி 7.50 மணிக்கு மதுரை சென்றடைகிறது. காலை 9.25 மணிக்கு வரும் இந்த ரயில் மாலை வரை, தேனி ரயில் நிலையத்தில் வெறுமனே நிறுத்தி வைக்கப்படுகிறது. பொதுவாக மதுரை செல்லும் தேனி மாவட்ட வர்த்தகர்கள், பொதுமக்கள் பலரும் பகலிலேயே சென்று வேலை முடித்து மாலை ஊர் திரும்புவது வழக்கம். ஆனால், இந்த ரயில் பகலில் இயங்காமல் மாலையிலேயே இயக்கப்படுகிறது. இதனால் தேனி மாவட்ட மக்களுக்கு பெரியளவில் பலன் இல்லாத நிலையே உள்ளது. மதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து தேனி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள், பக்தர்களுக்கு இந்த ரயிலின் நேர அட்டவணை சரியானதாக உள்ளது. தேனி மாவட்டத்தில் கும்பக்கரை, சுருளி அருவிகள், மேகமலை போன்ற சுற்றுலாத்தலங்களும், வீரபாண்டி கவுமாரியம்மன், குச்சனூர் சனீஸ்வரர் கோயில், சின்னமனூர் பூலா நந்தீஸ்வரர், உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உள்ளிட்ட பாரம்பரிய கோயில்கள் உள்ளன. ரயிலில் காலை 9.35 மணிக்கு தேனிக்கு வரும் வெளிமாவட்ட மக்கள் ஒருநாள் சுற்றுலாவாக இப்பகுதிகளை பார்த்து விட்டு மாலையில் தேனியில் இருந்து ரயிலில் ஏறிச் செல்கின்றனர். அதேபோல் அரசு அலுவலர்களும் காலை இந்த ரயிலில் வந்து விட்டு மாலையில் கிளம்பிச் செல்ல ஏதுவாக இருக்கிறது. ஆனால், தேனி மாவட்ட மக்களுக்கு இந்த ரயில் இயக்கம் பெரியளவில் பலன் தரவில்லை. எனவே பகல் முழுவதும் ரயில் நிலையத்தில் வெறுமனே நிறுத்தப்பட்டிருக்கும் இந்த ரயிலை மேலும் ஒருமுறை மதுரைக்கு இயக்க வேண்டும். மேலும் சென்னை, திருச்செந்தூர், ராமேசுவரம் உள்ளிட்ட ஊர்களுக்கும் நீட்டிக்க வேண்டும். அப்போதுதான் இந்த ரயில் முழுமையாக பயன்பாட்டுக்கு வரும் என்பதே தேனி மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு. தேனி மாவட்ட செய்தியாளர் MP. ஜீவா

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended