• முகப்பு
  • இலங்கை
  • புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையின் உடற்கல்வி போதனாசிரியர்கள் இருவருக்குமான மகத்தான வரவேற்பு

புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையின் உடற்கல்வி போதனாசிரியர்கள் இருவருக்குமான மகத்தான வரவேற்பு

புத்தளம் மாவாட்டம் - எம்.யூ.எம்.சனூன்

UPDATED: Sep 27, 2023, 2:17:40 AM

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற 35 வது சர்வதேச திறந்த மாஸ்டர்ஸ் தடகள போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்டு பதக்கங்களை வென்ற புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையின் உடற்கல்வி போதனாசிரியர்கள் இருவருக்குமான மகத்தான வரவேற்பு வைபவம் புத்தளம் நகரில்  இடம்பெற்றது. 

இந்த பாராட்டு வரவேற்பு நிகழ்வினை, போதைப்பாவனையில் இருந்து இளைஞர்களை மீட்டெடுப்பதிலும், பாதுகாப்பதிலும் துரிதமாக செயற்பட்டு வரும் புத்தளம் லெகூன் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர். 

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் இதற்கான பூரண அனுசரனையினை வழங்கி இருந்தார்.

இந்தப் போட்டிகளில் புத்தளத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் பதக்கங்களை வென்றுள்ளனர். உயரம் பாய்தல் போட்டியில் ஆசிரியர் எம்.எம்.எம். ஹுமாயூன் முதலாம் இடத்தைப் பெற்று தங்கப்பதக்கத்தையும், அவரது சகோதரர் ஆசிரியர் எம்.எப்.எம். துபைல் 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப்பதக்கத்தையும் பெற்று சாதனை நிலைநாட்டி இருந்தனர். 

புத்தளம் கொழும்பு முகத்திடலில் ஆரம்பமான இந்நிகழ்வில் இலங்கை நாட்டுக்கும்‌ புத்தளம் நகருக்கும் பெருமை சேர்த்த இரண்டு சகோதரர்களுக்கும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், ஏற்பாட்டு குழுவான லெகூன் அமைப்பின் தலைவர் எம்.ஐ.எம்.இல்ஹாம் ஆகியோர் இணைந்து விருது வழங்கி கௌரவித்தனர்.

தொடர்ந்து வெற்றி வீரர்கள் திறந்த வாகனத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மற்றும் லெகூன் அமைப்பினர் சகிதம் புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி வரை ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர்.

லெகூன் அமைப்பின் உலமாக்களால் வழி நடாத்தப்பட்ட வரவேற்பு ஊர்வலத்தில் சாஹிரா தேசிய பாடசாலையின் அதிபர் ஐ.ஏ.நஜீம், வெற்றி வீரர்களின் பயிற்றுவிப்பாளர் அப்துர்ரஹ்மான் சேர், ஆசிரியர்கள், உலமாக்கள், வர்த்தக நலன்புரி சங்க பிரதிநிதிகள், விளையாட்டு கழக அங்கத்தவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் மற்றும் பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வழி நெடுகிலும் வெற்றி வீரர்களுக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு, கைலாகு கொடுத்து மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டன.

VIDEOS

RELATED NEWS

Recommended