என்னை போல நூறாண்டு காலம் வாழ்க என தனது நூறாவது பிறந்தநாளில் வாழ்த்திய பாட்டி.

செ.சீனிவாசன்

UPDATED: May 11, 2023, 9:06:56 AM

நாகை மாவட்டம் திட்டச்சேரி அடுத்துள்ள வாழ்மங்கலம் பகுதியை சேர்ந்தவர் காமாட்சி. இவரது கணவர் கணபதி இந்திய சுதந்திர போராட்டத்தில் நேத்தாஜி சுபாஷ் சந்திரபோஸ் கொரில்லா படையில் பணியாற்றி வந்தவர்.

இந்த நிலையில் சுதந்திரப் போராட்ட வீரர் கணபதி கடந்த 2011ல் உடல்நலக்குறைவு காரணமாக இறந்துள்ளார். இவருக்கு மத்திய மற்றும் தமிழக அரசு சார்பில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சுந்தர போராட்ட வீரர் கணபதி- காமாட்சி கணபதி 

தம்பதியினருக்கு நான்கு மகள்கள் உள்ளனர்.இந்நிலையில் பாட்டி காமாட்சி தற்போது புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருமலைராயன் பட்டினத்தில் உள்ள அவரது மகள் வீட்டில் வசித்து வருகிறார்.

தள்ளாடும் வயதிலும் தளராத நம்பிக்கையுடன், தனது அன்றாட வேலையை தானே செய்து வரும் அளவிற்கு உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார் என்பது ஆச்சரியப்பட வேண்டிய விஷயமாகும்.

மேலும் தமிழின் மீது அதிக பற்று கொண்ட இவர் சரளமான தமிழில், உரையாடுவது பலரையும் ஒரு நிமிடம் நின்று கவனிக்கும் வகையில் உள்ளது. அதோடு மட்டுமின்றி பாடல் பாடுவது கவிதை வாசிப்பதென திறமைக்கு வயது ஒரு தடை இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் உள்ளது இந்தப் பாட்டியின் அன்றாட செயல்பாடுகள் அனைத்துமே.

இந்நிலையில் இன்று அந்த பாட்டிக்கு 100 வயதானதையொட்டி குடும்பத்தார்கள் மற்றும் ஊர் மக்கள் இணைந்து பூர்ணாபிஷேக விழா நடத்தி அசத்தி உள்ளனர்.

காரைக்கால் அடுத்த டி.ஆர் பட்டினத்தில் உள்ள அபிராமி அம்மன் கோவில் அருகே நடத்த இந்த விழாவில் பங்கேற்க உறவினர்கள் நண்பர்கள் மட்டுமின்றி ஊரே திரண்டது என்று தான் கூற வேண்டும்.

அதுமட்டுமின்றி முன்னாள் சுதந்திர போராட்ட வீரரின் மனைவி என்பதால் நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் குலத்துங்கன், எம்எல்ஏகள் நாகை ஷா நவாஸ், டி.ஆர்.பட்டினம் நாகு தியாகராஜன், புதுச்சேரி மாநில போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரப் பிரியங்கா, மற்றும் அரசு துறை அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் என ஏராளமானோர் ஆசி பெற்று சென்றுள்ளனர்.

மேலும் ஊர் மக்கள் இணைந்து பாட்டி காமாட்சி அவர்களுக்கு பிறந்தநாள் விழா கேக் வெட்டி கொண்டாடி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்ந்து அவர் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் தனது கையால் நெற்றியில் விபூதி வைத்து என்னைப்போல் நூறாண்டு வாழ்க வாழ்க என வாழ் நிறைய வாழ்த்தியது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த நிலையில் பாட்டி காமாட்சி அம்மாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பாட்டியின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு கடிதம் வாயிலாக வாழ்த்து தெரிவித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்கால் அருகே தனது 100 வயதான இரும்புப் பெண்மணியின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்று ஆசி பெற்றதை பலரும் தனது வாழ்வில் கிடைத்த வரப் பிரசாதமாக எண்ணி மகிழ்வுடன் சென்ற நிகழ்வு நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended