• முகப்பு
  • விவசாயம்
  • திருநெல்வேலி மாவட்டம் வடக்கு விஜயநாராயணம் பெரிய குளத்தை சீரமைக்க வலியுறுத்தி, ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பாக, தடையை மீறி,  விவசாயிகள் ஆர்ப்பாட்டம்! 

திருநெல்வேலி மாவட்டம் வடக்கு விஜயநாராயணம் பெரிய குளத்தை சீரமைக்க வலியுறுத்தி, ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பாக, தடையை மீறி,  விவசாயிகள் ஆர்ப்பாட்டம்! 

மேலப்பாளையம் ஹஸன்

UPDATED: May 8, 2023, 7:10:25 PM

"திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், நாங்குநேரி தாலுகா,  வடக்கு விஜயநாராயணம் பெரிய குளத்தை, உடனடியாக சீரமைத்து தரவேண்டும்!"- என்பதை வலியுறுத்தி,  (மே.8) காலையில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பாக, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அவ்வாறு, ஆர்ப்பாட்டம் செய்த விவசாயிகளை, போலீசார் கைது செய்து, அருகில் உள்ள, திருமண மண்டபத்தில், தங்க வைத்தனர்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி வட்டத்தில் உள்ள வடக்கு விஜயநாராயணத்தில் பெரிய குளம் உள்ளது.இந்த குளத்தின் மூலம், சுற்று வட்டார கிராமங்களில் உள்ள, ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவு நிலங்கள், பாசன வசதி பெற்றுவருகின்றன.

அத்துடன் சுற்றுப்புற கிராமங்களில், நிலத்தடி நீர் வளமும் அதிகரித்தும் காணப்படும். இந்நிலையில், கடந்த பல ஆண்டுகளாக, இந்த பெரிய குளம் தூர் வாரப்படாமலும், குளத்தின் கரைகள் பலப்படுத்தப்படாமலும், இருந்து வருகிறது.

இதனால் பருவமழை காலங்களில் கிடைக்கும், அதிகப்படியான மழைநீரை, கொஞ்சம் கூட சேமித்து வைக்க முடியாத அளவுக்கு, சங்கடமான சூழல் நீடித்து வருகிறது.

சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரில் ஒருவர் கூட இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு, யாதொரு நடவடிக்கையினையும் எடுக்கவில்லை.

இதன் காரணமாக, வடக்கு விஜயநாராயணம் பெரிய குளம் பாசன வசதி பெற்று வருகிற விவசாயிகள், மாவட்ட நிர்வாகத்திடமும், தமிழக முதல்வரின் தனிப்பிரிவிலும், தொடர்ந்து மனுக்கள் கொடுத்தும், அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராக, வீணாகி விட்டன.

இப்போதுள்ள கோடை காலத்தில், பெரிய குளம் சீரமைப்புக்கு, எந்த வித முயற்சியும் மேற்கொள்ளாத நிலையில், வடக்கு விஜயநாராயணத்தில் இருந்து, விவசாயிகள் சங்கத் தலைவரும், முன்னாள் கவுன்சிலருமான முருகன் தலைமையில், ஏராளமான விவசாயிகள்,

இம்மாதம் (மே)1- ஆம் தேதி சென்னை தலைமை செயலகத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, நேரில் சந்தித்து, மனு அளிக்கும் நோக்கத்தில் நடைப்பயணம் மேற்கொள்ள, விஜயநாராயணம் பகுதியில் இருந்து, புறப்பட்டனர். 

அப்போது, அவர்களை விஜயநாராயணம் போலீசார் தடுத்து நிறுத்தினர். அத்துடன், அனைவரையும் கைது செய்து, காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், விவசாயிகள் அனைவரும், கடந்த மே1-ஆம் தேதி முதல், 7-ஆம் தேதி வரை, உண்ணாவிரதம் மேற்கொண்டனர். 

உண்ணா விரதம் நேற்று (மை.7) மாலையுடன் முடிவடைந்ததை யொட்டி, இன்று (மே.8) காலையில், திருநெல்வேலி கொக்கிரகுளம் பகுதியிலுள்ள, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பாக, விவசாயிகள் சங்க தலைவர் முருகன் தலைமையில்,

சங்க உறுப்பினர்கள் சத்தியமூர்த்தி, சுப்பையா, பிரபாகரன்,முத்து, மந்திரமூர்த்தி, மகேஷ், சண்முகசுந்தரம், ஜெயக்குமார்,வேம்பு, பரஞ்சோதி, சங்கர் உட்பட பலர், தடையை மீறி கண்டன மற்றும் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அவர்களை, பாளையங்கோட்டை போலீசார் கைது செய்து, வண்ணார்பேட்டையில் உள்ள, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில், அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended