திமுக + அதிமுக கூட்டணி ஆசிரியர்கள் அவதி.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ஆசிரியர்களை அத்துக்கூலிகளாக நடத்தும் அரசு! பல்லாயிரக்கணக்கில் ஆசிரியர் பணியிடங்கள் பத்தாண்டுகளாக நிரப்படவில்லை. 3,800 பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக உள்ளன. இந்தச்சூழலில், வறுமைக்கோட்டில் வாழும் ஒரு சம்பளத்தை ஆசிரியர்களுக்கு நிர்ணயித்து, நிரந்தரமில்லா வேலை என்றால், கல்வித் துறையின் கதி இது தானா? இடைநிலை ஆசிரியர்களுக்கு 7,500, அடுத்த நிலைக்கு 10,000, முது நிலை ஆசிரியர்களுக்கு 12,000 சம்பளமாம். படிப்பறிவில்லா கட்டிடத்தொழிலாளி கூட ஒரு நாள் ஊதியம் ரூபாய் 1200 த்தில் இருந்து 1,500 வரை பெறுகிறார். இதைவிட குறைந்தகூலிக்கு ஒரு தொழிலாளியை வேலைக்கு அழைக்க முடியாது. ஆனால் படித்து, ஆசிரியர் பணிக்கான தேர்வும் எழுதி காத்திருக்கும் ஆசிரியர்களையோ அரசு அத்துக்கூலிக்கு கூப்பிடுகிறது. ஒரு மக்கள் நல அரசு செய்யக்கூடிய செயலா இது? சென்னை D.P.I அலுவலகத்தில் மூன்று நாட்கள் ஆசிரியர் பணியை நிரந்தரப்படுத்தப்படுத்த ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். முக்கிய காரணம், கடந்த பல வருடங்களாக பகுதி நேரமாக, ஒப்பந்தம் அடிப்படையில் 12000 பேர் வேலை செய்து வருகிறார்கள். மேலும் தற்போது தமிழக அரசு தற்காலிக ஆசிரியர் பணிக்கு ஆட்களை எடுக்கப்போவதாக அறிவித்து உள்ளது. இப்படிக்கடந்த 10 ஆண்டுகளாக நிரந்தர பணிக்கு ஆட்கள் எடுக்காமல் தாற்காலிகமாகவே அரசு இவர்களைப்பயன்படுத்துகிறது. இதை எதிர்த்து நிரந்தர வேலை கேட்டு போராடி வந்தவர்களை தற்போது தற்காலிக பணி நியமனத்தில் கூட தங்களுக்கு முன்னுரிமை இல்லை என்பதற்காக போராட்டம் செய்ய வைத்து விட்டது திமுக அரசு. கடந்த 2012 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது, அரசு உயர் நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 16,549 பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் (தையல், ஓவியம், உடற்கல்வி, இசை) தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு தொகுப்பூதியமாக முதலில் ரூ.5 ஆயிரம், பிறகு ரூ.7,700 என்றும், தற்போது ரூ.10 ஆயிரமும் வழங்கப்படுகிறது. மனம் நொந்து சிலர் விலகிய நிலையில், தற்போது சிறப்பு ஆசிரியர்களாக 12 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்குமாறு அரசுக்கு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து போராடி வருகின்றனர். தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி அவ்வப்போது மாவட்ட அளவிலும், சென்னை டிபிஐ அலுவலகத்திலும் தங்களை வருத்தி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மொட்டை அடித்தும், பாடையில் கிடத்தியும் போராட்டம் 2009 ஆம் ஆண்டு மத்திய அரசு கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை இயற்றியது. இந்த சட்டத்தின் படி தமிழக அரசு 2011ஆம் ஆண்டு பள்ளியில் இடைநிலை ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 % மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. இந்த தேர்வு இரண்டு தாள்களாக நடைபெறுகிறது. TET தாள் 1 , TET தாள் 2. 1ஆம் வகுப்பு முதல் 5வகுப்பு வரை பள்ளியில் பணிபுரிய ஆசிரியர் பட்டய பயிற்சி(DTED) முடித்து இருக்க வேண்டும் இவர்கள் TET தாள் 1 மட்டும் எழுதினால் போதும். 6 முதல் 8 வகுப்பு வரை ஆசிரியர் தேர்வுக்கு TET 1 , 2 தாள்களையும் எழுத வேண்டும். ஒவ்வொரு தாளும் 150 மதிப்பெண்ணுக்கு நடக்கிறது. பொதுப்பிரிவினர் 90 மதிப்பெண்ணும், பிற்படுத்தப் பிரிவினர் 82 மதிப்பெண்ணும் எடுக்க வேண்டும். இந்த மதிப்பெண் எடுத்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுதியானவர் ஆவர். ஆனால் வேலை கிடைக்காது. ஏன் கிடைக்காது என்று இது குறித்து ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பத்தாண்டுகளாக ஆசிரியர் பணிக்காகக் காத்திருக்கும் சமீபத்தில் DPI வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர் மாரிமுத்து கூறியதாவது; ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் வேலை கிடைக்காது. காரணம் அதற்கு அடுத்து நியமனத் தேர்வு நடத்துகிறார்கள். அதில் தேர்ச்சி பெற வேண்டும். இப்படி ஒரு பணிக்கு அடுத்து அடுத்து தேர்ச்சி வைத்துக் கொண்டிருப்பதை நிறுத்த வேண்டும். 2011ம் வருடத்திற்கு முன்பு ஆசிரியர் பணிக்கு எந்த தேர்வும் இல்லாமல் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டப்படிப்பு, B,Ed முடித்தவர்கள் 8 வகுப்பு வரை வேலைக்கும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திட வேண்டும். அதன் அடிப்படையில் வேலை கொடுப்பார்கள். இந்த நிலை 2011 முதல் மாறியது. ஆசிரியர் தகுதித் தேர்வு வைக்கத் தொடங்கினார்கள். காரணம், தகுதியானவர்கள் மட்டுமே பணியில் சேர வேண்டும் என்று சொல்கிறார்கள். அதன் பிறகு 2013ஆம் ஆண்டு இதில் இன்னும் ஒரு பிரிவை உருவாக்கி வெயிட்டேஜ் முறையைக் கொண்டு வந்தார்கள். அதாவது ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டும் போதாது 10வது , 12வது, பட்டப்படிப்பு, கல்வியியல் படிப்பும் கணக்கில் எடுத்துக் கொண்டு அதற்கு ஒரு மதிப்பெண் வழங்கி அதன் அடிப்படையில் வேலை வழங்கப்படும் என்று அறிவித்தனர். இதில் பல ஆசிரியர் தகுதி நீக்கம் அடைந்தார்கள். இதிலும் இன்னும் நுணுக்கத்தை கொண்டு வந்தார்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு, வெயிட்டேஜ், இவை மட்டும் இல்லாமல் காலி பணியிடங்கள் உருவானதும், நியமனத்திற்கான தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு தான் பணி என்று கடந்த அதிமுக அரசு 2018 ஆம் ஆண்டு அரசாணை வெளியிட்டுச் சென்றது. ஒரு ஆசிரியர் வேலைக்குப் பட்டப்படிப்பு, BEd படிப்பு, ஆசிரியர் தகுதித் தேர்வு(TET), வெயிட்டேஜ் மதிப்பெண், அதற்கு அடுத்து நியமன தேர்வு (Competitive Exam) இவ்வளவு முடித்தால் தான் ஆசிரியராக முடியும். அப்படி இவ்வளவும் முடித்தும் கடந்த 10 வருடங்களில் ஆசிரியர் பணிக்கு நிரந்தர ஆட்களை எடுக்கவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. ஒருவர் தகுதி இல்லாமலா பட்டப்படிப்பு, கல்வியில் படிப்பு முடித்து இருப்பார்கள்? ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிலை வந்தபின்னர் அனைவரும் அதற்குப் படிக்கத் தொடங்கினோம். 2011ஆம் ஆண்டு நடந்த தேர்வில் 2,000 ஆசிரியர்களுக்குப் பணி நியமனம் கிடைத்தது. 2014ஆம் வருடம் இருபதாயிரம் ஆசிரியருக்குப் பணி நியமனம் செய்வதாக அன்றைய அரசு அறிவித்து அதில் 1000 ஆசிரியர்களுக்கு அன்றைய முதல்வர் ஜெயலலிதா பணி ஆணை வழங்கினார். இவை நடந்த சில நாட்களில் அவர் பெங்களூர் நீதிமன்றத்தில் தண்டனை பெற்று சிறை சென்றதால் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டிய பணி நியமன ஆணையை இன்று வரை வழங்கவில்லை. அதற்கு அடுத்து இன்னும் நிறையப் பேர் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுக் காத்திருக்கிறார்கள். ஒருவர் ஓய்வு பெற்றால் அந்த இடம் காலியானதாக அறிவித்து எங்களுக்குப் பணி ஆணை வழங்கி இருக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கானவர்கள் ஓய்வு பெற்றும் எங்களுக்கு பணி நியமன ஆணை வழங்கவில்லை. 2014 ஆம் வருடத்திலேயே வழங்கியிருக்க வேண்டிய 19,000 பணி ஆணை என்ன ஆனது? அதற்கு அடுத்து இன்னும் நிறைய காலி இடங்கள் உருவாகி இருக்குமே? இவ்வளவு காலியிடங்கள் இருந்தும் ஏன் எங்களைப் பகுதி நேரம், தற்காலிகமாக எடுக்க வேண்டும்? ஓய்வு ஊதியம் வழங்குவதால் அரசுக்கு அதிகம் நிதி செலவாகிறது என்று சொல்லி 2003 ஏப்ரல் மாதத்திலிருந்து அரசுப் பணிக்கு சேருபவர்களுக்கு ஓய்வு ஊதியம் இல்லை என்று தமிழக அரசு முடிவுக்கு வந்தது. இன்றைய அரசின் செயல்பாடுகளை பார்த்தால் ஏன் நிரந்தர வேலைக்கு ஆசிரியர்களை எடுத்து முழு சம்பளம் கொடுக்க வேண்டும் தற்காலிகமாக வேலைக்கு எடுத்து – ஓய்வூதியத்தை நிறுத்தியது போல் – முழு சம்பளம் கொடுப்பதையும் நிறுத்தலாம் என்பது போல சமீபத்திய நடவடிக்கைகள் உள்ளன. திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் 177 வது அறிக்கையாக ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை நிரந்தர ஆசிரியராக நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லி இருந்தது. ஆனால், இன்று அதற்கு நேர்மாறாக செயல்படுவது ஏன்? அதே போல் 2018 ஆம் ஆண்டு வெளியிட்ட அரசாணை 149யை ரத்து செய்யப்படும் என்று இன்றைய முதல்வர் ஸ்டாலின் அன்றே சொன்னார். ஆனால், இன்னும் ரத்து செய்யவில்லை. ஏறக்குறைய முப்பது ஆயிரம் ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுக் காத்திருக்கும் போது எதற்குத் தேர்ச்சி பெறாத நபர்களைத் தற்காலிகமாகப் பணிக்கு எடுக்க வேண்டும்? நிரந்தர ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET), நியமன தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று சொல்லும் அரசு, தற்காலிக ஆசிரியர் பணிக்கு அப்படி எதுவும் வேண்டாம் இல்லம் தேடி கல்விப் பணி செய்து கொண்டிருப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று சொல்கிறார்கள்.இல்லம் தேடி கல்வியில் பணிபுரிபவர்கள் கல்வித் தகுதி 10வது 12வது படித்தவர்கள். இவர்கள் எப்படி மாணவர்களுக்குத் தரமான கல்வியைக் கொடுக்க முடியும். அன்றாடங் காய்ச்சியும் 60 வயதில் பென்ஷன் வாங்கலாம்! தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் தான் ஆசிரியர் பணிக்கு எடுக்க வேண்டும் என்று 2009 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தைப் பின்பற்றும் தமிழக அரசு இந்த தற்காலிக ஆசிரியர் பணி நியமனம் மூலம் என்ன உணர்த்துகிறது. தாற்காலிகம் தான் அதனால் கல்வித் தகுதி இல்லையென்றாலும் பரவாயில்லை என்றால், மாணவர்கள் கல்வி பற்றியும் கவலை இல்லை என்றல்லவா உணரமுடிகிறது. அனைத்து தேர்வில் தேர்ச்சி பெற்றுக் காத்திருக்கும் பல ஆயிரம் ஆசிரியர்கள் வேலையில்லாமல் இருக்கும் போது தற்காலிக ஆசிரியர் பணிக்கு எங்களுக்கு அல்லவா முன்னுரிமை கொடுத்து இருக்க வேண்டும். 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ கல்லூரியில் சேர இடம் வழங்க வேண்டும்.நீட் தேர்வு தேவையில்லை,ஏற்கனவே ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எதற்கு இன்னொரு தேர்வு - திமுக அரசு ஆசிரியர் பயிற்சி,BEd ல் தேர்ச்சி பெற்றிருந்தாலும் ஆசிரியர் பணியில் சேர தகுதித்தேர்வு எழுத(TET) வேண்டும்.தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் மறு நியமனத்தேர்வு(Go 149) எழுத வேண்டும் . செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

RELATED NEWS

Recommended