• முகப்பு
  • crime
  • காஞ்சிபுரம் மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் சேர்க்கையை அதிகமாக காண்பித்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பித்தலாட்டமா?

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் சேர்க்கையை அதிகமாக காண்பித்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பித்தலாட்டமா?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கொரோனா பொது முடக்கக் காலத்தில் தடைப்பட்ட கல்வியைக் கற்பிக்க, திமுக அரசால், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் `இல்லம் தேடி கல்வி’ என்ற சிறப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இத்திட்டத்துக்காக 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இத்திட்டம், கொரோனாவால் கல்வியை இழந்து தவிக்கும், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் சிறார்களுக்கானது. கற்றல் இழப்பை ஈடுசெய்யும் நோக்கம் கொண்டது. பள்ளி நேரம் முடிந்த பிறகு, மாலைப் பொழுதில், நாள் ஒன்றுக்கு ஒன்றரை மணி நேரத்துக்கு மிகாமல், தன்னார்வலர்கள் மூலமாக, குடியிருப்புப் பகுதிகளில் கற்றல் செயல்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனத் திமுக அரசு அறிவித்தது. கற்றல் இடைவெளியைக் குறைக்கப் பாடல்கள், புதிர் விளையாட்டுகள், விடுகதைகள், விளையாட்டு வழிக் கணிதம், எளிய அறிவியல் பரிசோதனைகள் என ஆறு மாதங்கள் குடியிருப்புப் பகுதிகளில் இச்செயல்பாடுகள் மேற்கொள்ளப் படும் என்றும் அரசுப் பள்ளிக் குழந்தைகளில், 20 பேருக்கு தலா ஒரு தன்னார்வலர் என்ற விகிதத்தில் தன்னார்வலர்களையும், கூடவே தொண்டு நிறுவனங்களையும் கொண்டு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. "இல்லம் தேடி கல்வி வகுப்புகள் பெரும்பாலும் தரமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டு பல பகுதிகளில் இருந்து வருகின்றது". இந் நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் எவ்வளவு மாணவர்கள் படித்து வருகிறார்கள் என நமது செய்தியாளர், மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆர்த்தி அவர்களிடம் கேட்டு இருந்தார். சுமார் ஒன்றே முக்கால் மணி நேரம் கழித்து மாவட்ட ஆட்சியர் கூடுதல் முதன்மை கல்வி அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு தகவல் அளித்திருந்தார். அதன்படி கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி அவர்களை தொடர்பு கொண்டு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் காமேஸ்வரி அவர்களின் செல்பேசி எண் பெறப்பட்டது. காமேஸ்வரி அவர்களிடம் பட்டியல் கேட்டபோது, இரண்டு மணி நேரம் காத்திருங்கள்.நான் "தெளிவாக தயாரித்து" அளிக்கின்றேன் என தெரிவித்தார். இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் காமேஸ்வரி அளித்த பட்டியலில் காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் ஆகிய 5 ஒன்றியங்களை சேர்ந்த 62,534 ஆயிரம் மாணவ மாணவர்கள் இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் படித்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனை விளக்க கையேடு வெளியிட்ட மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "காஞ்சிபுரம் மாவட்டத்தில் 53 ஆயிரத்து 769 மாணவ-மாணவிகள் இல்லம் தேடி கல்வியில் பயின்று" வருவதாகத் தெரிவித்தார். "8765 மாணவ-மாணவிகள் கூடுதலாக உள்ளனரே" என மாவட்ட ஒருங்கிணைப்பாளர் காமேஸ்வரி அவர்களுக்கு போன் செய்து கேட்டதில், நிறைய மாணவர்கள் அரைமணிநேரத்தில் சேர்ந்து உள்ளார்கள் என முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்தார். மேலும் நான் அனுப்பிய பட்டியல் தான் சரியானது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் அளித்த "பட்டியல் அப்டேட்டில் இல்லை" என மாவட்ட நிர்வாகத்தை குறை கூறினார். "53 ஆயிரத்து 769 மாணவ மாணவிகள் இல்லம் தேடி கல்வி பயின்று வருகிறார்கள் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி அளித்த பேட்டி பல தொலைக்காட்சிகளிலும் அனைத்து முன்னணி நாளிதழ்களிலும் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது". இல்லம் தேடி கல்வி திட்டத்தில் முறைகேடு நடைபெறுவதை இவர்கள் அளித்த பட்டியலிலேயே நிரூபணமாகியுள்ளது. ஒரு சில கல்வி அதிகாரிகள் விவரம் அறியாமலும், ஆர்வக் கோளாறாலும், தங்களோட மேலதிகாரிகள்கிட்ட நல்ல பேரு வாங்கணும்ங்கற நோக்கத்துலயும் தங்களோட பகுதிகள்ல அதிக மாணவர்கள் பயன் அடைஞ்சிருக்காங்கனு கணக்குக் காட்ட ஆசைப்படுறாங்க. இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் நோக்கம் கற்றல் இடைவெளி குறைவதா, கணக்குக் காட்டுவதா ? காஞ்சிபுரம் செய்தியாளர் லட்சுமிகாந்த்.

VIDEOS

RELATED NEWS

Recommended