• முகப்பு
  • விவசாயம்
  • திருவாரூர் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட கோடை சாகுபடி பயிர்களை கணக்கெடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

திருவாரூர் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட கோடை சாகுபடி பயிர்களை கணக்கெடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

இளவரசன்

UPDATED: May 12, 2023, 1:26:43 PM

திருவாரூர் மாவட்டத்தில் பிரதானமாக நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக கோடைகால பயிராகவும் பணப்பயிராகவும் விளங்கும் பருத்தியை விவசாயிகள் அதிக அளவு பயிரிட்டு வருகின்றனர்.

பருத்தி கடந்த சில வருடங்களாக அதிக விலைக்கு எடுக்கப்பட்டு வருவதால் விவசாயிகள் ஆர்வமுடன் பருத்தி பயிரிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இந்த வருடம் 40,000 ஏக்கர் பரப்பளவில் மாவட்டம் முழுவதும் விவசாயிகள் பருத்தி சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதேபோன்று பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் எள் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக திருவாரூரில் பெய்த கனமழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி வயல்களில் மழை நீர் தேங்கி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்து வந்தனர்.

மேலும் வயல்களில் தேங்கிய மழை நீரை வடிய வைக்க உரிய வடிகால் வசதி இல்லாத காரணத்தினால் பருத்தி பயிர்கள் முற்றிலுமாக அழுகி பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தொடர்ந்து தெரிவித்து வந்தனர்.

மேலும் பாதிக்கப்பட்ட பருத்தி பயிர்களை வேளாண் துறை அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். பாதிக்கப்பட்ட பருத்தி மற்றும் எள் சாகுபடிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்ட பருத்தி மற்றும் எள் பயிர்களை கணக்கெடுக்க மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார்.

வேளாண் துறை அலுவலர்கள் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் பாதிக்கப்பட்ட பருத்திப் மற்றும் எள் பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை சமர்ப்பிப்பார்கள்.

அதனைத் தொடர்ந்து இந்த அறிக்கை தமிழக அரசு அனுப்பி வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

VIDEOS

RELATED NEWS

Recommended