• முகப்பு
  • இலங்கை
  • கடற்றொழிலாளர்களுக்கு சீனா மண்ணெண்ணை நன்கொடை - காலத்தின் தேவையறிந்த உதவிக்கு அமைச்சர் டக்ளஸ் நன்றி தெரிவிப்பு

கடற்றொழிலாளர்களுக்கு சீனா மண்ணெண்ணை நன்கொடை - காலத்தின் தேவையறிந்த உதவிக்கு அமைச்சர் டக்ளஸ் நன்றி தெரிவிப்பு

ஊடகப் பிரிவு: கடற்றொழில் அமைச்சர்

UPDATED: May 23, 2023, 1:08:33 PM

சீன அரசாங்கத்தினால் நாடளாவிய ரீதியில் உள்ள கடற்றொழிலாளர்களுக்காக  வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் விநியோகிக்கும் சம்பிரதாய பூர்வ நிகழ்வு இன்று (23.05.2023) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்,  இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த மற்றும் இலங்கைக்கான சீன தூதுவர் கீ ஷென்ஹொங் ஆகியோரின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.

இதனடிப்படையில் நாடளாவிய ரீதியில் உள்ள சுமார் 128 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் ஊடாக 27,000 மீன்பிடி படகுகளின் உரிமையாளர்களுக்கு தலா 150 லீற்றர் மண்ணெண்ணெய் வழங்கப்படவுள்ளன.

இந்நிகழ்வில் உரையாற்றிய கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா -

இலங்கைக்கும சீனாவிற்குமிடையில் நீண்ட காலமாக நிலவி வரும் கலாசார மற்றும் நட்புறவு காரணமாக சீனா எமது நாட்டுக்கு பெருமளவில் உதவிகளை செய்து வருவதாகவும் அதனடிப்படையில் இலங்கையில் நிலவும் எரிபொருள் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்காக, காலத்தின் தேவையறிந்து  விவசாயிகள் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக ஒரு தொகை டீசல் வழங்கப்பட்டதாகவும், தன்னுடைய வேண்டுகோளுக்கு அமைய, தற்போது டீசலுக்கு பதிலாக  கடற்றொழிலாளர்களுக்கு சீனத் தூதுவர் தலைமையில் மண்ணெண்ணெய் வழங்கக் கிடைத்தமைக்காக தான் பெரிதும் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், இலங்கையில் கடற்றொழிலாளர்கள் தினமும் 5000 முதல் 10,000 ரூபா வரை மண்ணெண்ணெய்க்காக செலவிடுவதாகவும் அச் செலவைக் குறைப்பதற்காக இலங்கையிலுள்ள தனியார் நிறுவனமொன்று மின் கலத்தினால் இயங்கும் படகு இயந்திரங்களை தயாரித்து வருவதாகவும், அவ்வாறு தயாரிக்கப்பட்ட இயந்திரத்தை சீனத் தூதுவரின் பிரசன்னத்துடன் இன்றைய தினம் அறிமுகம் செய்து வைப்பதில் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்ததுடன் இவ் இயந்திரத்தரன் செயற்றரறனை மேலும் மேம்படுத்துவதற்கு உதவ வேண்டுமென சீனத் தூதுவரிடம் வேண்டுகோள் விடுப்பதாகவும்,  பாணந்துறை கடற்றொழில் துறைமுகத்தை சுற்றுலாப் பயணிகளை கவரும் பிரதேசமாக மாற்றுவதற்காக சீனாவின் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இவ் வைபவத்தில் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த உரையாற்றுகையில்:
சீனா எமது நாட்டுக்கு பெருமளவு உதவி செய்யும் நாடெனவும், எமது நாடு தற்போது முகங்கொடுத்து வரும் பிரச்சினையிலிருந்து மீள்வதற்காக மென்மேலும் சீனாவின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். 

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ ஷென்ஹொங், சீனாவும் இலங்கையும் நீண்டகாலமாக சிறந்த நட்புறவுடன் செயற்பட்டு வருவதாகவும் அந்த உறவுகளை தொடரந்து பேணுவதற்கு தாம் பாடுபடப் போவதாகவும் இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு படகு, வலைகள் மற்றும் வீடுகள் அமைத்துக் கொடுப்பதற்கு தாம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் மொறட்டுவை பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜயந்த கெட்டகொட, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்க, அமைச்சின் மேலதிக செயலாளர் தம்மிக்க ரணதுங்க, மொரட்டுவை நகர சபையின் முன்னாள் மேயர் சமன் லால், கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த, கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் நிலங்க ஜயவர்தன உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended