• முகப்பு
  • district
  • மாடு மாலை தாண்டும் விழா புழுதி பறக்க ஓடி வந்த காளைகள்.

மாடு மாலை தாண்டும் விழா புழுதி பறக்க ஓடி வந்த காளைகள்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அருகே தொப்பம்பட்டியில் உள்ள மாரியம்மன் மற்றும் முத்தாலம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாடு தோகை தாண்டும் விழா நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை பால்குட விழாவும், திங்கள் கிழமை கரகம் எடுத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றதைத் தொடர்ந்து இன்று மாலை மாடு தோகை தாண்டும் விழா நடைபெற்றது. சுமார் 70 ஆணடுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்நிகழ்வில் குறிப்பிட்ட தூரத்திலிருந்து ஓடி வரும் காளைகள் எல்லைக்கோடு அருகே கீழே போடப்பட்டுள்ள துணியை முதலில் தாண்டிக்குதித்து செல்லும் காளைக்கு மரியாதை செய்வது வழக்கம். இதையே மாடு தோகை தாண்டுதல், மாலை தாண்டுதல் எனவும் எருதுஓட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரால் (நாயக்கர் சமூகம்) மட்டுமே மாடு தோகை தாண்டும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கொரோனா ஊரடங்கால் கடந்த மூன்று ஆண்டுகளாக விழா நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. திருச்சி, கரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 16க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 300க்கும் மேற்பட்ட காளைகளுக்கும் வரவேற்பு அளிக்கப்பட்டு காளைகள் அனைத்தும் கோவில் முன்பாக நிறுத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தி தீர்த்தம் தெளிக்கப்பட்ட பின்னர் கோவிலில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் அழைத்துச் செல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து எல்லைக்கோடு அமைக்கும் பொருட்களை தாரை தப்பட்டை முழங்க சிறுமிகள் சுமந்து ஊர்வலமாகச் சென்று ஒரு குறிப்பிட்ட இடத்தில் சிறுமிகள் கொண்டு வந்த வைக்கோலால் செய்யப்பட்ட கயிற்றை மூங்கிலில் கட்டியும், வெள்ளை நிற துணியை தரையில் போட்டும் எல்லைக்கோடு அமைக்கப்பட்டு அவற்றிக்கு சடங்குள் செய்யப்பட்டது. பின்னர் தூரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட காளைகளுக்கு உத்தரவு வழங்கப்பட்டு அங்கிருந்து அவிழ்த்து விடப்பட்டதால் காளைகள் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக் கொண்டு வந்தது. தங்களது காளையை வெற்றி பெற வைக்க அதன் உரிமையாளர்களும் காளைகளுடன் ஓடி வந்தனர். புழுதியை கிழப்பியவாறு ஓடிவந்த காளைகளும் அதனை துரத்திக்கொண்டே ஓடி வந்த அதன் உரிமையாளர்களையும் கண்ட இளைஞர்கள் உற்சாக மிகுதியில் விசில் சத்தம் எழுப்பியதால் விழா களைகட்டியது. இதில் முதலில் வந்து துணியை தாண்டிய புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள ஜெயமங்கலத்தைச் சேர்ந்த காளைக்கும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2 மற்றும் 3 வதாக வந்த காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. காளைகள் எல்லையை வந்தடையும் போது அவற்றின் மீது மஞ்சள் தூவப்பட்டது. இந்த மாலை தாண்டும் நிகழ்ச்சியை காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்திருந்தனர். மணப்பாறை செய்தியாளர் லட்சுமணன்.

VIDEOS

RELATED NEWS

Recommended