2 சுடுகாடுகள் அமைக்க இடம் வழங்கக் கோரி மனு.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

வந்தவாசி, ஜூன் 15: வந்தவாசியை அடுத்த சென்னாவரம் ஊராட்சியில் இரு சுடுகாடுகள் அமைக்க இடம் வழங்கக் கோரி கிராம மக்கள் மனு அளித்தனர். வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் ஜமாபந்தியில் வட்டாட்சியர் முருகானந்தத்திடம் சென்னாவரம் ஊராட்சி மன்றத் தலைவர் வீரராகவன் தலைமையில் அந்த கிராம மக்கள் இந்த மனுவை அளித்தனர். மனு விவரம்: சென்னாவரம் ஊராட்சிக்கு உள்பட்ட கோபாலகிருஷ்ணன் தெரு, சாரதி தெரு, ராமசாமி தெரு, அன்னை சத்யா நகர், காந்தி நகர், மாணக்ராஜ் தெரு, சின்னதம்பி தெரு, மேல்மருவத்தூர் சாலை ஆகிய பகுதிகளில் சுமார் 700 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளிலிருந்து சென்னாவரம் சுடுகாட்டுக்கு சுமார் 2 கி.மீ. தூரம் செல்ல வேண்டும். இதனால் இந்த பகுதி மக்கள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இந்த பகுதிகளுக்கென ஒரு சுடுகாடு அமைக்க இடம் வழங்க வேண்டும். மேலும் சென்னாவரம் ஊராட்சிக்கு உள்பட்ட எம்ஜிஆர் நகர் காலனி பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கென ஒரு சுடுகாடு அமைக்க இடம் வழங்க வேண்டும். இரு சுடுகாடுகளுக்கும் இடம் வழங்கக் கோரி பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இதுகுறித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து சுடுகாடுகளுக்கு இடம் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். வந்தவாசி செய்தியாளர் அகிலன் சுப்பிரமணியன்.

VIDEOS

RELATED NEWS

Recommended