• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சியில் 110 டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களின் பரிதாபம்? நகராட்சி நிர்வாகம் சீர் செய்யுமா?

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சியில் 110 டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களின் பரிதாபம்? நகராட்சி நிர்வாகம் சீர் செய்யுமா?

ராஜ்குமார்

UPDATED: May 25, 2023, 6:44:41 AM

தென்காசி மே 25 புதிதாக தோற்றுவிக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தில் பரப்பளவாலும் மக்கள் தொகையாலும் அதிகமானது கடையநல்லூர் நகராட்சியாகும் 52.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உள்ள இந்நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன.

கடந்த 2008 ஆம் ஆண்டு நகரில் தோன்றிய மர்ம காய்ச்சல் காரணமாக பொதுமக்கள் பலரும் பாதிப்புக்குள்ளாயினர்,

இது குறித்து அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல தமிழகத்தின் ஒட்டுமொத்த நகராட்சி நிர்வாகம் சுகாதார பணிகள் இணையகம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஆகியவை இணைந்து கடையநல்லூரில் ஒவ்வொரு வீடுகளிலும் குடிநீர், கழிவுநீர் சுற்றுப்புற சுகாதாரம் குறித்த ஆய்வுகள் மேற்கொண்டு மர்ம காய்ச்சலுக்கான காரணங்களை கண்டறிய பாடுபட்டனர்.

அப்பொழுது அவர்களுக்கு உதவியாக சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் உத்தரவின் பேரில் 30 டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் பணியில் அமர்த்தபட்டனர்.

அதனைத் தொடர்ந்து கொசு ஒழிப்பு பணிக்காக மேலும் பலர் சேர்க்கப்பட்டனர் கடந்த ஏழு ஆண்டுகளாக 110 பணியாளர்கள் இதில் ஆண் பணியாளர்கள் ஏழு பேரும் மற்றவர்கள் பெண்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களின் அடிப்படை பணி என்பது டெங்கு கொசு உற்பத்தியா வதை தடுக்கும் வகையில் வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டி ஏசி மிசின் வெளியில் கடக்கும் உரல் மற்றும் சிரட்டை டப்பாக்களில் நல்ல குடிநீரில் தேங்கி உருவாகும் ஏடிஎஸ் எனப்படும் டெங்கு கொசுக்களை முட்டை பருவத்திலேயே ஒழிப்பது ஆகும் அதற்காக வார்டு வாரியாக மூன்று பணியாளர்கள் பணியினை மேற்கொண்டனர்.

இவர்கள் வீடுகளுக்குள் சென்று அனைத்தையும் சோதனை செய்வதோடு கொசு முட்டை காணப்பட்டால் பூச்சி மற்றும் பிளிச்சிங் மற்றும் கிருமி நாசினி ஆகியவற்றை ஊற்றி அழிப்பதுடன் அதனை தொடர்ந்து கண்காணித்து மேலும் பரவாமல் தடுக்கவும் மேல் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுப்பதுதான் இவர்களுடைய பணியாகும்.

கடந்த சில ஆண்டுகளாக டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களை நகராட்சி சொத்து வரி மற்றும் குடிநீர் வசூல் செய்ய உதவி செய்ய வைத்ததோடு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மற்றும் அரசு நலத்திட்டங்களுக்காக பொதுமக்களை சந்தித்து விளம்பரம் செய்வது என்ற பணியையும் செய்து கொண்டு இருந்தனர்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ராஜபாளையத்தை சார்ந்த ஒரு தனியார் நிறுவனம் தென்காசி - மதுரை கொல்லம் தேசிய நெடுஞ்சாலை பகுதி தினசரி மார்க்கெட் மற்றும் 11 வார்டுகளில் குப்பை அகற்றும் பணியுடன் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களையும் குத்தகைக்கு எடுத்து பணி செய்ய வைத்தனர்.

இந்த ஆண்டு அந்த நிறுவனத்திற்கு டெண்டர் கிடைக்கப்படாததால் காரைக்குடியைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் குப்பை  அகற்றுவது மற்றும் குப்பைகளை பிரித்தல், உரமாக்குதல் போன்ற பணிகளுக்கு டெண்டர் எடுத்துள்ளது.

டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களாக பணியாற்றி வரும் 110 நபர்களுக்கு கடந்த மூன்று நாட்களாக பணி ஏதும் வழங்கப்படவில்லை, அவர்கள் பணி குறித்து எந்தவொரு முறையான தகவலை நகராட்சி நிர்வாகம் தெரிவிக்கவில்லை.

இது குறித்து பணியாளர்கள் மற்றும் நகராட்சியில் விசாரித்த போது டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களை வைத்து வேலை செய்யும் கான்ட்ராக்ட் டெண்டர் யாருக்கும் வழங்கப்படவில்லை என்பதால் இந்த 110 நபர்களையும் மகளிர் சுய உதவி குழு ஒன்று உருவாக்கி அவர்களின் கீழ் டெண்டர் கோரப்பட்டு பணிகளை வழங்க ஆவணம் செய்யப்படும் என தெரிவித்தனர்.

கொரோனா மற்றும் பேரிடர் காலங்களில் தங்கள் உயிரையும் துச்சமென மதித்து பணியாற்றிய இந்த 110 பணியாளர்களின் பணி நியமனம் கேள்விக்குறியானதால் பணியாற்றும் ஏழைப் பெண்களின் நிலை பரிதாபமாக காணப்படுகிறது,

குறிப்பாக கடையநல்லூரை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த சில பெண்கள் கொரோனா காலத்தில் பஸ் போக்குவரத்து இல்லாத நேரத்திலும் சொந்த வாகனங்களிலும் வந்து இந்த பணியினை ஆவலுடன் பணிபுரிந்தனர் தற்போது இந்த பணியினை நம்பி ஏழை பெண்கள் மகளிர் குழுக்களில் கடன் வங்கி தனி நபரிடம் கடன் பெற்றுள்ளனர்.

இவர்களது பணி நியமனம் நடைபெற்றால் மட்டுமே 110 நபர்களின் வாழ்க்கை சீரடையும் மகளிர் குழுக்கள் மூலம் இவர்களை ஒன்றிணைப்பதால் வெளியூர் சார்ந்தவர்கள் ஆதார் அடையாளச் சான்று முகவரி கடையநல்லூர் நகரின் பகுதியை காட்டாததால் அவர்களையும் வெளியேற்ற வேண்டிய இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் ஏழு ஆண்களும் கடந்த 10 வருடங்களாக பணிபுரிந்து வருகின்றனர் அவர்களும் மகளிர் குழுக்கள் மூலம் கொசு ஒழிப்பு பணியாளர்களின் நியமனத்திற்கு வரும் பொழுது ஆண் என்ற அடிப்படையில் அவர்களையும் வெளியேற்ற வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களின் ஒரு நாளைய சம்பளம் 320 ரூபாய் இதில் 46 ரூபாய் பிஎஃப் பிடித்தம் போக 274 ரூபாய் பணமாக கிடைக்கும் கடந்த சில ஆண்டுகளாய் பணியாற்றிய ஒரு சிலருக்கு பி.எப் பணம் அந்நிறுவனத்தின் மூலம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து வரும் சூழலில் ஒவ்வொரு மாதமும் பத்தாம் தேதி வாக்கில் இவர்களுக்கு சம்பளம் வங்கி கணக்கில் ஏற்றி அதன் மூலம் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நகராட்சியில் பணியாற்றி வரும் 110 நபர்களின் பணி நியமனம் கேள்விக்குள்ளாகிய நிலையில் தற்போது புதிதாக ஆட்களை தேர்வு செய்யப்படும் என அரசியல் பிரபலங்கள் வசூலில் களத்தில் இறங்கியுள்ளதாகவும் இந்த மக்களை கவலை க்குள்ளாக்கியுள்ளது.

கொரானா மற்றும் பேரிடர் காலங்களில் தங்கள் உயிரை துச்சமென நினைத்து பணியாற்றிய இவர்களுக்கே மீண்டும் பணி வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏற்கனவே குப்பைகள் அகற்றும் பணிக்கு மட்டும் டெண்டர் விடப்பட்டுள்ளதால் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களின் பணி நியமனத்தை நகராட்சி நிர்வாகமே நேரடியாக மேற்கொள்ள வேண்டும் அப்படி மேற்கொண்டால் மட்டுமே இந்த 110 நபர்களின் வேலைக்கு உத்திரவாதம் கிடைக்கும் இல்லையென்றால் நகரில் மற்ற பகுதிகளில் இங்கி வரும் மகளிர் சுய உ தவி குழுவைச் சார்ந்த பெண்களும் தாங்களும் இப்பணிக்கு வருவதாக தெரிவித்து ஊரு விளைவிக்க கூடும் எனவும் தெரிகிறது.

ஆகவே ஏற்கனவே இங்கு பணியாற்றி வரும் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள மகளிர் குழுக்களில் இணைந்து வங்கி கடன் மற்றும் சுய கடன் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் இவர்களின் வாழ்வாதாரத்திற்கு நகராட்சி நிர்வாகம் காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை மேற்கொள்வதுடன் இவர்களின் வாழ்வு சிறக்க தகுந்த ஆலோசனை மற்றும் பணி நியமனம் பழைய நபர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வழங்க வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended