- முகப்பு
- மாவட்டச் செய்தி
- பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராமத்தில் பத்தாவது முறையாக கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்.
பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராமத்தில் பத்தாவது முறையாக கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்.
லட்சுமி காந்த்
UPDATED: Nov 23, 2024, 12:05:45 PM
காஞ்சிபுரம் மாவட்டம்
தமிழகம் முழுவதும் நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு மறுநாள், நவம்பர், 1 அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டதால், அன்றைய தினம் கிராம சபை கூட்டம் நடக்கவில்லை. அதற்கு பதிலாக, நவம்பர் 23ம் தேதி கிராம சபை கூட்டம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 20 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 5746 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை மத்திய மாநில அரசுகள் அறிவித்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பரந்தூர் விமான நிலையம்
மேலும் கிராமப்புறங்களில் நிலம் எடுப்பதற்கான அறிவிப்புகள் நாளிதழ்களில் வெளியிட்டு , நிலம் எடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டம் அறிவிப்பு வெளியிட்ட நாள் முதல் விலை நிலங்கள், குடியிருப்புகள் ,நீர்நிலைகள் உள்ளிட்டவைகள் பாதிக்கப்படக்கூடிய நிலையில் ஏகனாபுரம் கிராம மக்கள் பல்வேறுபட்ட தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அறவழிப் போராட்டம்
இந்நிலையில் இரவு நேர அறவழிப் போராட்டம் துவங்கி இன்றோடு 852 நாள் நிறைவடைந்து உள்ளது.
மேலும் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் 10வது முறையாக ஏகனாபுரம் கிராமத்தில் பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதில் ஏகனாபுரம் கிராமங்களில் உள்ள மூன்று ஏரிகளையும் , தாங்கல் களையும், குளங்களையும் , நன்செய் புன்செய் நிலங்களையும் குடியிருப்பு பகுதிகளையும் முழுமையாக கபளீகரம் செய்யும் சர்வதேச இரண்டாவது பசுமை விமான நிலைய திட்டத்தை மாநில மத்திய அரசுகள் முழுமையாக கைவிட வலியுறுத்தி பத்தாவது முறையாக கிராம சபை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மௌன அஞ்சலி
கூட்டம் துவங்குவதற்கு முன்னதாக, விளைநிலங்களும் குடியிருப்பு பகுதிகளும் எடுக்க முற்படும் மாநில மத்திய அரசே கண்டித்து தற்கொலை செய்து கொண்ட ஏகனாபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திவ்யா கணபதி அவர்களுக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகள் விமான நிலையம் அமைய உள்ள மற்ற பகுதிகளில் நடைபெறுவதாகவும், ஆனால் ஏகானபுரத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
கிராம சபை கூட்டம்
ஏகனபுரம் கிராமத்தை வஞ்சிக்கும் வகையில் கிராமத்திற்கு தேவையான நியாயவிலை கட்டிடம், கிராம நிர்வாக அலுவலர் கட்டிடம் கட்டி தராமல் அதிகாரிகள் அலசியம் காட்டி வருவதாக கிராம சபை கூட்டத்தை பாதிலையே நிறுத்தி கிராம மக்கள் வெளியேறி தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே ஆறு முறை கிராம சபை கூட்டத்தையும் கிராம மக்கள் புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.